செய்திகள்
ராகுல் டிராவிட்

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம்

Published On 2019-07-09 10:00 GMT   |   Update On 2019-07-09 10:00 GMT
ராகுல் டிராவிட்டை தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று செல்லமாக அழைக்கப்படும் டிராவிட், ஓய்வு பெற்ற பிறகு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

திறமை வாய்ந்த இளம் வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு ஏற்றுமதி செய்யும் தார்மீக பொறுப்பை டிராவிட் சிறப்பாக செய்து வந்தார். இந்நிலையில் டிராவிட்டை தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பிசிசிஐ நியமனம் செய்துள்ளது.

இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் விதத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய கிரிக்கெட் அகாடமியை 2000-ம் ஆண்டு உருவாக்கியது. தற்போது அந்த அகாடமியின் தலைவராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சி வழங்குவது, ஆலோசனை வழங்குவது, வீரர்களை ஊக்கப்படுத்துவது, ஊழியர்கள் தேர்வு என தேசிய கிரிக்கெட் அகாடமியின் முழு பொறுப்பையும் ராகுல் டிராவிட் ஏற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியா ஏ அணி, 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி, 23 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கும் டிராவிட் ஆலோசனை வழங்குவார் என்றும், தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி பயிற்சியாளர்களுடனும் டிராவிட் இணைந்து பங்களிப்பார் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.

தலைமை பயிற்சியாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் அவர் பொறுப்பாவார் எனவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
Tags:    

Similar News