செய்திகள்
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்

களத்தில் யார் இருந்தாலும், விக்கெட்தான் எங்க டார்கெட் -கேன் வில்லியம்சன் பளீர் பேட்டி

Published On 2019-07-09 06:20 GMT   |   Update On 2019-07-09 06:20 GMT
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் எடுப்பதுதான் தங்கள் அணியின் டார்கெட் என கூறியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் நிதானமாகவும், விறுவிறுப்பாகவும் விளையாடி இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குள் நுழைகின்றன.

இந்த 4 அணிகளில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று களம் காண்கின்றன. இந்திய அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையவும், நியூசிலாந்து அணி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கவும் கடுமையாக மல்லுக்கட்டும்.

இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு சற்றும் பஞ்சம் இருக்காது. இந்த போட்டி குறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:



உலக கோப்பையின் இறுதிப்போட்டிக்குள் நுழைய மற்ற 3 அணிகளுமே கடுமையாக போராடும். நாங்களும் அப்படித்தான். இந்தியாவுடன் இன்று மோதவுள்ளோம்.

கடுமையான போட்டியில் கலந்துக் கொண்டு விளையாடுவது மிகச் சிறந்த ஒன்றுதான். அப்போதுதான் சிறப்பான கிரிக்கெட் திறன் வெளிப்படும் என்பதில் மாற்றம் இல்லை. எதிரணி எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் அதுபற்றி மட்டுமே நினைத்து கவலைப்படக்கூடாது.

இது கிரிக்கெட் போட்டி. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே யார் களத்தில் உள்ளார்கள்? என்பதை கவனிக்காமல் விக்கெட் எடுப்பதைதான் நோக்கமாகக் கொண்டு தீவிரமாக விளையாட வேண்டும்.

அரையிறுதிக்கு முன்னேற தகுதியானவர்கள்தான் நாங்கள். இன்றைய ஆட்டம் மட்டுமே எங்கள் கவனத்தில் இப்போது உள்ளது. இந்திய அணியில் இம்முறை ரோகித் ஷர்மா ஃபார்மில் இருக்கிறார் என்பது மறுக்க முடியாத ஒன்றுதான்.

ஆனாலும் இது ஒரு போட்டி. சிறப்பாக விளையாடுவதையே நோக்கமாக கொண்டாக வேண்டும். அப்படித்தான் செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News