செய்திகள்
வெற்றி கொண்டாட்டத்தில் தென் ஆப்பிரிக்கா

உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா அணியிடம் வீழ்ந்தது, ஆஸ்திரேலியா

Published On 2019-07-07 01:14 GMT   |   Update On 2019-07-07 01:14 GMT
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி த்ரில் வெற்றிபெற்றது.
மான்செஸ்டர்:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மான்செஸ்டரில் நேற்று நடந்த 45-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, தென்ஆப்பிரிக்காவை சந்தித்தது. ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணியில் காயம் அடைந்த ஹசிம் அம்லாவுக்கு பதிலாக தப்ரைஸ் ‌ஷம்சி இடம் பிடித்தார்.

‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்ராம், குயின்டான் டி காக் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடினார்கள். 11.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 79 ரன்னாக இருந்த போது மார்க்ராம் (34 ரன், 37 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) நாதன் லயன் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். அணியின் ஸ்கோர் 114 ரன்னை எட்டிய போது குயின்டான் டி காக் (52 ரன், 51 பந்து, 7 பவுண்டரி) நாதன் லயன் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து வான்டெர் துஸ்சென், கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ்சுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். பாப் டுபிஸ்சிஸ் 93 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் சதத்தை (100 ரன்கள்) எட்டினார். ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 12-வது சதம் இதுவாகும்.

நடப்பு உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் அடித்த முதல் சதம் இதுவாகும். சதம் அடித்த பிறகு அவர் எதிர்கொண்ட முதல் பந்தில் பெரேன்டோர்ப் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 265 ரன்னாக (43 ஓவர்) இருந்தது.

இதனை அடுத்து களம் கண்ட பால் டுமினி 14 ரன்னிலும், பிரிட்டோரிஸ் 2 ரன்னிலும் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். சதத்தை நெருங்கிய வான்டெர் துஸ்சென் (95 ரன், 97 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) கம்மின்ஸ் பந்து வீச்சில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. பெலக்வாயோ 4 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா 2 விக்கெட்டும், கம்மின்ஸ், பெரேன்டோர்ப் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு 326 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அஸ்திரேலியா அணியின் சார்பில் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ஆரோன் பிஞ்ச் 3(4) ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய க்வாஜா 6(5) ரன்னில் காயம் காரணமாக வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஸ்டிவன் ஸ்மித் 7(6) ரன்னில் நடையை கட்டினார். அடுத்ததாக டேவிட் வார்னர் மற்றும் ஸ்டோய்னிஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அந்த ஜோடியில் ஸ்டோய்னிஸ் 22(34) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 12(20) ரன்களில் வெளியேறினார். இதனிடையே தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்ததாக டேவிட் வார்னருடன் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து அலெக்ஸ் கேரி தனது அரைசதத்தை பதிவு செய்தார். அப்போது சிறப்பாக ஆடி வந்த டேவிட் வார்னர் 122(117) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக அலெக்ஸ் கேரியுடன், கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அலெக்ஸ் கேரி தனது அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். பின்னர் அந்த ஜோடியில் கம்மின்ஸ் 9(15) ரன்களில் கேட்ச் ஆக, அவரைத்தொடர்ந்து அலெக்ஸ் கேரி 85(69) ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தின் போக்கு தென் ஆப்பிரிக்கா அணியின் வசம் சென்றது. அடுத்து களமிறங்கிய அதிரடி காட்டிய க்வாஜா 18(14) ரன்களில் ரபாடா பந்து வீச்சில் போல்ட் ஆனார். அவரைத்தொடர்ந்து ஸ்டார்க் 16(11) ரன்களும், லியான் 3(3) ரன்னுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் பெரேன்டோர்ப் 11(6) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் ஆஸ்திரேலியா அணி 49.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளும், பெலக்வாயோ மற்றும் பிரிட்டோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கிரிஸ் மோரிஸ் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி த்ரில் வெற்றிபெற்றது.

லீக் சுற்றில் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது தோல்வி இதுவாகும். முன்னதாக ஆஸ்திரேலியா அணி இந்தியாவிடம் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

Similar News