செய்திகள்

ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் இங்கிலாந்து அணி ‘பீதி’ அடையவில்லை - கேப்டன் மோர்கன்

Published On 2019-06-26 07:53 GMT   |   Update On 2019-06-26 07:53 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால் இங்கிலாந்து அணி ‘பீதி’ அடையவில்லை என இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியுள்ளார்.
லண்டன்:

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ‘லீக்’ ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 44.4 ஓவரில் 221 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 64 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா 6-வது வெற்றியை பெற்றது. இதன்மூலம் அந்த அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

இங்கிலாந்து அணி 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வி பெற்றுள்ளது. அடுத்து இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் இங்கிலாந்து கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதுகுறித்து இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் நல்ல பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தி விளையாடினார்கள். எங்களுக்கு விரைவில் விக்கெட்டுக்கள் விழுந்ததால் நெருக்கடி ஏற்பட்டது.

ஆஸ்திரேலிய வீரர்கள் 25 ஓவர் வரை தங்கள் கட்டுப்பாட்டில் ஆட்டத்தை வைத்திருந்தனர். அதன்பின் அவர்களை 280 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினோம். ஆனால் நாங்கள் 20 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது மோசமாக அமைந்தது.

இந்த சூழ்நிலைகள் மிகப்பெரிய அதிருப்தியை அளிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால் இங்கிலாந்து அணி ‘பீதி’ அடையவில்லை. எல்லாமே எங்கள் கையில் தான் இருக்கிறது. வரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி முன்னேற்றம் காண்போம் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News