செய்திகள்

தென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு

Published On 2019-06-24 06:00 GMT   |   Update On 2019-06-24 06:00 GMT
உலக கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேற முடியாமல் முதல் சுற்றிலேயே வெளியேறியதற்கு ஐ.பி.எல். போட்டியே காரணம் என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிஸ்சிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
லார்ட்ஸ்:

உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானிடம் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன் குவித்தது.

ஹாரிஸ் சோகைல் 59 பந்தில் 89 ரன்னும் (9 பவுண்டரி, 3 சிக்சர்), பாபர் ஆசம் 69 ரன்னும் (7 பவுண்டரி), இமாம்-உல்-ஹக், பசர்ஜ மானதலா 44 ரன்னும் எடுத்தனர். நிகிடி 3 விக்கெட்டும், இம்ரான் தாகீர் 2 விக்கெட்டும், மர்கிராம், பெலுவாயோ தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களே எடுக்க முடிந்தது.இதனால் அந்த அணி 49 ரன்னில் தோற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 5-வது தோல்வியை தழுவி போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டது.

கேப்டன் டு பிளிஸ்சிஸ் அதிகபட்சமாக 63 ரன்னும், குயிண்டன் டி காக் 47 ரன்னும்,பெகுலுவாயோ 46 ரன்னும் எடுத்தனர். வகாப் ரியாஸ், சதஸ்கான் தலா 3 விக்கெட்டும், முகமது அமீர் 2 விக்கெட்டும் சகீன் ஷா அப்ரிடி 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

உலக கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேற முடியாமல் முதல் சுற்றிலேயே வெளியேறியதற்கு ஐ.பி.எல். போட்டியே காரணம் என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிஸ்சிஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாங்கள் சரியான கிரிக்கெட்டை வெளிப்படுத்தவில்லை. பாகிஸ்தான் அணியின் சிறப்பான தொடக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. தொடக்கத்திலேயே நாங்கள் விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.

உலக கோப்பையில் நாங்கள் சரியாக ஆடவில்லை. எங்கள் தோல்வியை நியாயப்படுத்த முடியாது. இம்ரான்தாகிர் சிறப்பாக பந்து வீசினார். அவர் விதிவிலக்கானவர். மற்ற பந்து வீச்சாளர்கள் அவருக்கு துணை நிற்கவில்லை.

எங்கள் அணியின் வேகப்பந்து வீரர் ரபடாவை ஐ.பி.எல். போட்டியில் விளையாடாமல் இருக்க முயற்சி செய்தோம். அவர் ஐ.பி.எல். போட்டியில் ஆடாமல் இருந்தால் புத்துணர்வுடன் இருந்து இருப்பார். ஓய்வு இல்லாமல் இருந்தது பாதிப்பை ஏற்படுத்தியது. ஐ.பி.எல். போட்டியை விட உலக கோப்பை முக்கியமானது.



தென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐ.பி.எல். போட்டி காரணமாக அமைந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தான் அணி 2-வது வெற்றியை பெற்றது.

இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறும் போது “அணி வீரர்களின் ஒட்டு மொத்த செயல்பாடால் வெற்றி பெற்றோம். தொடக்கம் நன்றாக இருந்தது. ஹாரிஸ் சோகைல் மிரட்டும் வகையில் ஆடினார். அவரது ஆட்டம் தான் திருப்பு முனையாகும். எங்களது பந்து வீச்சும் நேர்த்தியாக இருந்தது” என்றார்.

பாகிஸ்தான் அணி 7-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை 26-ந்தேதி சந்திக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி இலங்கையை 28-ந்தேதி எதிர்கொள்கிறது.
Tags:    

Similar News