செய்திகள்

சச்சின், லாரா சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைப்பாரா விராட் கோலி?

Published On 2019-06-21 12:17 GMT   |   Update On 2019-06-21 12:17 GMT
ஆப்கானிஸ்தானுக்கு ஏதிரான ஆட்டத்தின்போது கோலி சர்வதேச போட்டிகளில் மிக விரைவாக 20 ஆயிரம் ரன்களை கடந்து உலக சாதனை படைப்பாரா? என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் எழுந்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை (ஜூன் 22) மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ள 28-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை ஏதிர்கொள்கிறது. இந்த போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 104 ரன்கள் அடித்தால் சர்வதேச போட்டிகளில் மிக விரைவாக 20 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை அடைவார்.

இதற்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை சேர்த்து மிக விரைவாக 20 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் சச்சின் தெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரைன் லாரா ஆகியோர்  முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். இருவரும் சரியாக 453 சர்வதேச போட்டிகளில் விளையாடி இந்த சாதனையினை படைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்திய அணியின் விராட் கோலி தற்போதுவரை 415 (131 டெஸ்ட், 222 ஒருநாள், 62 டி20) சர்வதேச போட்டிகளில் விளையாடி அதன் மூலம் மொத்தமாக 19,896 (6613 டெஸ்ட், 11020 ஒருநாள், 2263 டி20) ரன்கள் அடித்துள்ளார். இந்நிலையில் நாளை நடைபெற உள்ள ஆப்கானிஸ்தானுக்கு ஏதிரான ஆட்டத்தின்போது இன்னும் 104 ரன்கள் அடித்தால் விராட் கோலி அதிவிரைவாக 20 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.



மேலும், சர்வதேச போட்டிகளில் சச்சின் தெண்டுல்கர் (34,357 ரன்கள்) மற்றும் ராகுல் டிராவிட் (24,208 ரன்கள்)-ஐ அடுத்து 20 ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி அடைவார். ஆகையால் நாளை நடைபெற உள்ள ஆப்கானிஸ்தானுக்கு ஏதிரான ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கரின் சாதனைகளை தகர்த்து உலக சாதனை படைத்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை (ஜூன் 16) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 22-வது லீக் ஆட்டத்தின்போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 11,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News