செய்திகள்

இங்கிலாந்து அணியின் சவாலை சமாளிக்குமா இலங்கை? இன்று மோதல்

Published On 2019-06-21 06:11 GMT   |   Update On 2019-06-21 06:11 GMT
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.
லீட்ஸ்:

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீட்சில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையை எதிர்கொள்கிறது.

ரன் குவிப்பில் மலைக்க வைக்கும் இங்கிலாந்து இந்த உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தானை உதைத்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் பணிந்தது. அந்த அணியின் ஜோரூட் (367), கேப்டன் இயான் மோர்கன் (249), பேர்ஸ்டோ (218), ஜோஸ் பட்லர் (187) ஆகியோர் பேட்டிங்கில் அசத்தி வருகிறார்கள். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார்கள். இந்த உலக கோப்பையில் 4 முறை 300 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ள இங்கிலாந்து அதிக ரன் குவித்த அணியாகவும் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 397 ரன்) வலம் வருகிறது.

இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள இலங்கை அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வி கண்டது பாகிஸ்தான், வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இலங்கை அணியில் கேப்டன் கருணாரத்னே, குசல் பெரேரா தவிர யாரும் மெச்சும் வகையில் பேட்டிங் செய்யவில்லை. பந்து வீச்சும் அச்சுறுத்தலாக இல்லை.

எனவே இன்றைய ஆட்டத்தில் வலுவான இங்கிலாந்து அணியின் ஆதிக்கத்துக்கு இலங்கை அணியால் ஈடுகொடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான். இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: ஜேம்ஸ் வின்ஸ், பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்கவுட் அல்லது பிளங்கெட்.

இலங்கை: கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, திரிமன்னே, குசல் மென்டிஸ், மேத்யூஸ், ஸ்ரீவர்தனா, திசரா பெரேரா, தனஞ்ஜெயா டி சில்வா, உதனா, மலிங்கா, நுவான் பிரதீப். 
Tags:    

Similar News