செய்திகள்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்: ஸ்டீவ் வாக் சுவாரசிய தகவல்

Published On 2019-06-19 12:33 GMT   |   Update On 2019-06-19 12:33 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் சுவாரசியமான தகவலினை தெரிவித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் கடந்த மாதம் (மே 30) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

தற்போது, உலகக்கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று ஆட்டங்கள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் ரோகித் சர்மா, வங்காள தேசத்தின் ஷாகிப் அல் ஹசன், இங்கிலாந்து அணியின் மோர்கன் போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தனது கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறியதாவது:-

நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச்-தான் சிறந்த பேட்ஸ்மேன். இலங்கைக்கு ஏதிரான ஆட்டத்தின்போது பிஞ்ச் அடித்த 153 ரன்கள் (132 பந்துகள்) தான் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தற்போது வரை ஆடியதில் சிறந்த இன்னிங்ஸ். ஆரோன் பிஞ்ச்-ஐ பொருத்தவரை கிரிக்கெட் விளையாடும்போதும் போட்டி முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போதும் அவர் மிகுந்த கவனத்துடனும் நிதானமாகவும் உள்ளார்.



மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தை பொருத்தவரை இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள்தான் பங்குபெறும் என நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தற்போது வரை அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 384 ரன்களுடன்  வங்காளதேச அணியின் ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்திலும், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 363 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 343 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News