செய்திகள்

ஷாகிப் அல் ஹசன் அபூர்வமான வீரர்: வங்காள தேச கேப்டன் புகழாரம்

Published On 2019-06-18 10:00 GMT   |   Update On 2019-06-18 10:00 GMT
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து அணியை வெற்றிபெற வைத்த ஷாகிப் அல் ஹசனை, வங்காள தேச கேப்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.
உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 322 ரன் இலக்கை எடுத்து வங்காளதேசம் அதிர்ச்சி கொடுத்தது. டான்டனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன் குவித்தது.

ஷாய் ஹோப் 121 பந்துகளில் 96 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), லிவிஸ் 67 பந்தில் 70 ரன்னும், (6 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மையர் 26 பந்தில் 50 ரன்னும், (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். முகமது சைபுதீன், முஷ்டாபிஜூர் ரகுமான் தலா 3 விக்கெட்டும், ஷாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் விளையாடிய வங்காளதேசம் ஷாகிப் அல் ஹசனின் அபாரமான சதத்தால் 41.3 ஓவர்களிலேயே இலக்கை எடுத்தது. அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 322 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை ஊதி தள்ளி அபார வெற்றி பெற்றது.

முன்னாள் கேப்டனான ஷாகிப் அல் ஹசன் 99 பந்தில் 124 ரன்னும், (16 பவுண்டரி), லிட்டோன் தாஸ் 69 பந்தில் 94 ரன்னும் (8 பவுண்டரி, 4 சிக்சர்), தமிம் இக்பால் 48 ரன்னும் எடுத்தனர்.

வங்காளதேசம் பெற்ற 2-வது வெற்றியாகும். வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் மோர்தாசா கூறியதாவது:-

முஷ்டாபிஜூர் ரகுமான் ஒரே ஒவரில் 2 விக்கெட் கைப்பற்றியதே ஆட்டத்தின் திருப்புமுனை. இதனால்தான் வெஸ்ட்இண்டீஸின் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

ஷாகிப் ஹசன் எங்கள் பேட்டிங்கில் முக்கியத்துவம் பெற்றவர். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் ரன்களை குவித்து வருகிறார். அவருக்கு பக்கபலமாக லிட்டோன் தாஸ் விளையாடினார். ஷாகிப் அல் ஹசன் ஒரு அபூர்வமான வீரர். அவரைப்போல மற்ற வீரர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 3-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறியதாவது:-

ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. இதனால் 40 முதல் 50 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். எங்களது பந்து வீச்சும், பீல்டிங்கும் சரியாக அமையவில்லை. இனிவரும் ஒவ்வொரு ஆட்டமும் எங்களுக்கு இறுதிப் போட்டி போன்றது.

இவ்வாறு அவர் கூறினார்.



2 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 5 புள்ளிகளுடன் இருக்கும் வங்காளதேசம் 6-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வருகிற 20-ந்தேதி எதிர்கொள்கிறது.

1 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 3 புள்ளியுடன் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அடுத்த ஆட்டத்தில் நியூசிலாந்தை 22-ந்தேதி சந்திக்கிறது.
Tags:    

Similar News