செய்திகள்

ஐ.பி.எல்.லில் உடற் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும் - இந்திய வீரர்களுக்கு கோலி அறிவுரை

Published On 2019-03-18 07:27 GMT   |   Update On 2019-03-18 07:27 GMT
உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஐ.பி.எல். போட்டியின் போது இந்திய வீரர்கள் உடற் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்று விராட்கோலி அறிவுரை வழங்கியுள்ளார். #ViratKohli
பெங்களூர்:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது.

உலககோப்பை போட்டிக்கு முன்பு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா நடக்கிறது. இந்தப்போட்டி வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. முடியும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மே மாதம் 12-ந்தேதி முடிவடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக கோப்பை நேரத்தில் இந்திய வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஐ.பி.எல்.லில் காயம் அடைந்தால் வீரர்கள் உலக கோப்பையில் விளையாட இயலாது.

இந்திய வீரர்கள் ஐ,.பி.எல்.லில் ஆடுவது குறித்து கிரிக்கெட் வாரியமும், தேர்வு குழுவும் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் போது இந்திய வீரர்கள் உடற் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேப்டன் விராட்கோலி அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்கள் விளையாடுவது குறித்து அணி உரிமையாளர்களுக்கு எந்தவித அறிவுறுத்தலும் கொடுக்கப்படவில்லை. ஐ.பி.எல். போட்டியில் விளையாடினாலும், உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணி வீரர்கள் தங்களது உடல் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வீரரும் அவர்களது உடல் நிலைக்கு ஏற்றவாறு போட்டிகளில் விளையாட வேண்டும்.

ஏனென்றால் என்னுடைய உடல் தகுதிக்கு நான் 10 முதல் 12 போட்டிகளில் விளையாட முடியும். மற்றவர்கள் தங்களது உடல் நிலைக்கு ஏற்ப ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

மேலும் ஐ.பி.எல்.லில் வீரர்கள் நன்றாக விளையாடினால் அந்த மனபலத்தை உலக கோப்பைக்கு கொண்டு செல்ல முடியும்.

இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார்.

உலக கோப்பை போட்டி காரணமாக ஐ.பி.எல். போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. #ViratKohli
Tags:    

Similar News