செய்திகள்

நாளை 4-வது ஆட்டம்- கடைசி 2 போட்டியில் டோனிக்கு ஓய்வு

Published On 2019-03-09 06:50 GMT   |   Update On 2019-03-09 06:50 GMT
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் நாளை (10-ந் தேதி) நடக்கிறது. இந்த போட்டியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #INDvAUS #ViratKohli #dhoni

ராஞ்சி:

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன் குவித்தது.

உஸ்மான் கவாஜா 113 பந்தில் 104 ரன்னும் (11 பவுண்டரி, 1 சிக்சர்), ஆரோன் பிஞ்ச் 93 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய இந்தியா 48.2 ஓவரில் 281 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 32 ரன்னில் வெற்றி பெற்றது.

வீராட் கோலி தனி ஒருவராக போராடி சதம் அடித்தார். அவர் 95 பந்தில் 123 ரன் (16 பவுண்டரி, 1 சிக்சர்) குவித்தார். இந்த சதம் பலன் இல்லாமல் வீணானது.

கும்மினஸ், ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் வீராட் கோலி கூறியதாவது:-


ஆஸ்திரேலியா 350 ரன்னுக்கு மேல் குவித்து விடும் என்று நினைத்தேன். ஆனால் நமது பவுலர்கள் ஆஸ்திரேலியாவை பின்னர் கட்டுப்படுத்தினர்.

என்னால் முடிந்தவரை கடுமையாக போராடினேன். நான் கூடுதலாக ரன் எடுக்க நினைத்தேன். ஹம்லா சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தி என்னை அவுட் செய்தார். நான் ‘அவுட்’ ஆகிய விதத்தால் அதிருப்தி அடைந்தேன்.

அடுத்த போட்டியில் அணியில் சில மாற்றம் இருக்கும். உலக கோப்பைக்கு முன்பு அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 2 போட்டியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “கடைசி 2 போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். டோனி இந்த 2 போட்டியிலும் விளையாட மாட்டார். அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

டோனி இடத்தில் ரி‌ஷப்பண்டுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. உலக கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா விளையாடும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் அனுபவத்துக்காக ரி‌ஷப் பண்டுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இதே போல முகமது ‌ஷமி காயம் அடைந்ததால் அவர் இடத்தில் புவனேஷ்வர்குமார் களம் இறங்குவார். தவான் இடத்தில் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் நாளை (10-ந் தேதி) நடக்கிறது.

ராஞ்சி போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்லும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது. ஆஸ்திரேலிய அணி வெற்றியை நீட்டித்து தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.

சர்வதேச போட்டிகளில் 16,967 ரன்கள் எடுத்திருந்த டோனி, 17 ஆயிரம் ரன்னை எட்டுவதற்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. நேற்றைய ஆட்டத்தின்போது அவர் 26 ரன்னில் ஆட்டம் இழந்தார். எனவே, 17 ஆயிரம் ரன் என்ற இலக்கை எட்டுவதற்கு இன்னும் 7 ரன் அவருக்கு தேவை. 

இந்நிலையில், கடைசி 2 போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், 17 ஆயிரம் ரன் இலக்கை எட்டுவதற்கு அவர் உலக கோப்பை வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. #INDvAUS #ViratKohli #dhoni

Tags:    

Similar News