செய்திகள்

பேட் கம்மின்ஸ், ஜேசன் ஹோல்டர் ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் முன்னேற்றம்

Published On 2019-02-05 11:12 GMT   |   Update On 2019-02-05 11:12 GMT
டெஸ்ட் தொடரில் அசத்தி வரும் கேட் கம்மின்ஸ், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர். #ICC
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 381 ரன்களிலும், ஆண்டிகுவாவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற அந்த அணியின் கேப்டன் முக்கிய காரணமாக இருந்தார். அவர் முதல் டெஸ்டில் 2 விக்கெட்டும், 2-வது டெஸ்டில் ஐந்து விக்கெட்டும் கைப்பற்றினார். இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் 778 புள்ளிகளுடன் நான்கு இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

இதற்கு முன் 2001-ல் கார்ட்னி வால்ஷ் 778 புள்ளிகள் பெற்றிருந்தார். அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவர் இவ்வளவு புள்ளிகள் பெற்ற சாதனையை ஹோல்டர் தற்போது 18 வருடத்திற்குப்பிறகு பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இரண்டு டெஸ்டிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. முதல் டெஸ்டில் 10 விக்கெட்டும், 2-வது டெஸ்டில் நான்கு விக்கெட்டுக்களும் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை பெற்ற பேட் கம்மின்ஸ் முதன்முறையாக 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தென்ஆப்பிரிக்க வீரர் ரபாடா 882 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் (878) 3-வது இடத்திலும், பிலாண்டர் (860) 4-வது இடத்திலும், ஜடேஜா (794) புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
Tags:    

Similar News