செய்திகள்

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஜோ பேர்ன்ஸ், ஹெட் சதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாளில் 384/4

Published On 2019-02-01 09:20 GMT   |   Update On 2019-02-01 09:20 GMT
கான்பெர்ராவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜோ பேர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் சதத்தால் ஆஸ்திரேலியா முதல்நாளில் 4 விக்கெட் இழப்பிற்கு 384 ரன்கள் குவித்துள்ளது. #AUSvSL
இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கான்பெர்ராவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். இலங்கையின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 28 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது. ஹாரிஸ் 11 ரன்னிலும், கவாஜா ரன் எதுவும் எடுக்காமலும், லாபஸ்சேக்னே 6 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு ஜோ பேர்ன்ஸ் - டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அவர்கள் இலங்கை பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர்.



ஜோ பேர்ன்ஸ் தனது 4-வது சதத்தையும், டிராவிஸ் ஹெட் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திணறினர். சதம் அடித்த இருவரும் 150 ரன்னைக் கடந்தனர். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 336 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டிராவிஸ் ஹெட் 161 ரன்னில் ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தனர்.

அடுத்து ஜோ பேர்ன்ஸ் உடன் பேட்டர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய முதல்நாள் ஆட்டம் முடியும் வரை நிலைத்து நின்று விளையாடியது. இதனால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 384 ரன்கள் குவித்துள்ளது. ஜோ பேர்ன்ஸ் 172 ரன்னுடனும், பேட்டர்சன் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News