செய்திகள்

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: விராட் கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு

Published On 2019-01-10 08:30 GMT   |   Update On 2019-01-10 08:30 GMT
ஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா ஆகியோர் முறையே பேட்ஸ்மேன், பவுலர் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்கள். #ICCODIRankings
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் வீரர்கள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்டிங்கில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். அவர் கடந்த ஆண்டில் 14 ஒரு நாள் போட்டியில் 1,202 ரன் எடுத்தார். இதில் 6 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 166 ரன் (அவுட் இல்லை) குவித்தார். சராசரி 133.55 ஆகும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 12-ந்தேதி தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் கோலி சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா 871 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் அவர் 19 ஆட்டத்தில் 1030 ரன் எடுத்தார். இதில் 5 சதங்கள் அடங்கும். சராசரி 73.57 ஆகும். மற்ற இந்திய வீரர்களில் தவான் 9-வது இடத்தில் உள்ளார்.

டெய்லர் (நியூசிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), பாபர் ஆசம் (பாகிஸ்தான்), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), டு பிளிசிஸ் (தென் ஆப்பிரிக்கா), ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் முறையே 3 முதல் 8-வது இடங்களில் உள்ளனர். குயிண்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா) 10-வது இடத்தில் உள்ளார்.

பந்து வீச்சிலும் இந்திய வேகப்பந்து வீரர் பும்ரா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். அவர் 841 புள்ளிகள் பெற்று உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற இந்திய வீரர்களில் குல்தீப் யாதவ் 723 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், சாஹல் 6-வது இடத்திலும் உள்ளனர்.

ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), 2-வது இடத்திலும், ரபாடா (தென் ஆப்பிரிக்கா) 4-வது இடத்திலும், முஸ்டாபிஷூர் ரகுமான் (வங்காள தேசம்) 5-வது இடத்திலும் உள்ளனர்.

அணிகளை பொறுத்தவரை இந்தியா 121 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை முழுமையாக கைப்பற்றினால் இந்திய அணி இங்கிலாந்தை நெருங்கும்.

இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 113 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 111 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 102 புள்ளியுடன் 5-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 100 புள்ளியுடன் 6-வது இடத்திலும் உள்ளன.
Tags:    

Similar News