சிறப்புக் கட்டுரைகள்

பிரபு திலக்


ஆறுமனமே ஆறு: கல்யாணமாம் கல்யாணம்!

Published On 2022-07-03 11:41 GMT   |   Update On 2022-07-03 11:41 GMT
  • குழந்தைத் திருமணம்கிறது குழந்தைகளின் மேல நிகழ்த்தப்படுற ஒரு வன்முறை.
  • சமூக அநீதியை வெளிச்சத்துக்குக் கொண்டு வர ஒவ்வொருத்தரும் முன்வரணும்.

நண்பா்களே, சமீபத்துல கண்ணிலே பட்ட சில செய்திங்க என்னை ரொம்பவே நிலை குலையப் பண்ணிடிச்சி. தென் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயசு சிறுமி. அம்மா சர்க்கரை நோயால இறந்து போயிடுறாங்க. அப்பா, அந்தச் சிறுமியை 37 வயசு பழ வியாபாரிக்குக் கட்டாயப்படுத்தி, கல்யாணம் செஞ்சு வெச்சுடுறாரு. கல்யாணம் நடந்து மூணே நாள்ல அந்தக் குழந்தை இறந்துபோயிடுது. அதுவும் அதிர்ச்சி தாங்காம இறந்துபோயிடுது. இது நடந்தது போன வருஷம்.

அதே வருஷம் செப்டம்பர் மாசத்துல நடந்த இன்னொரு பரிதாபமான சம்பவத்தையும் சொல்லியாகணும். வேலூர் மாவட்டத்துல இருக்காரு டைல்ஸ் ஒட்டுற அந்தக் கூலித்தொழிலாளி. அவருக்கு வயசு 37. அவரு கல்யாணம் செஞ்சுகிட்ட பொண்ணுக்கு வயசு 23. கணவனைவிட 14 வயசு இளையவங்க. 16 வயசுலயே அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் நடந்துட்டதா சொல்றாங்க. கல்யாணம் நடந்த ஏழு வருஷத்துல அஞ்சரை வயசுல ஒரு பொண்ணு, நாலு வயசுல ஒரு பையன், ஆறு மாச ஆண் குழந்தைன்னு மொத்தம் மூணு குழந்தைங்க. அந்தத் தொழிலாளிக்குக் குடிப்பழக்கம் இருந்திருக்கு. தினமும் வீட்டுக்கு வந்து மனைவியோட சண்டை போடுறது, அடிக்கிறது, குடும்பச் செலவுக்குப் பணம் தராம இருக்கறதுன்னு இருந்திருக்காரு மனுஷன்.

அந்தப் பொண்ணு அடி தாங்காம அம்மா வீட்டுக்குப் போறது, பெரியவங்க சமாதானம் செஞ்சதும் திரும்பி கணவன் வீட்டுக்கு வர்றதுன்னு இருந்திருக்கு. ஒரு நாள் அம்மாகிட்ட `வீடு வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்'னு சொல்லிட்டு கணவன் வீட்டுக்குப் போயிருக்காங்க. சாயந்தரம் ஆகியும் திரும்பி வரலை. போன்ல கூப்பிட்டா போனையும் எடுக்கலை. பயந்துபோனவங்க, மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் பார்த்திருக்காங்க. வீட்டுக்குள்ள அந்தப் பொண்ணு தூக்குல தொங்கியிருக்காங்க. மூணு குழந்தைகளும் கழுத்தை இறுக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தாங்க. இந்தக் கொடூரமான சம்பவத்துக்குக் காரணம் அந்தப் பொண்ணோட கணவன்தான். அதைவிட முக்கியமான காரணம், இவ்வளவு வயசு வித்தியாசத்துல அந்தப் பொண்ணுக்குக் குழந்தைத் திருமணம் செஞ்சுவெச்சதுதான்.

இது மாதிரி எத்தனையோ சம்பவங்கள்... தம்பியோட மனைவி பிரிஞ்சு போயிடுறாங்க. தம்பி மனம் உடைஞ்சுடக் கூடாதாம். அதனால அக்காவே தன்னோட 14 வயசு மகளைத் தம்பிக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காங்க.

வீட்டுல வறுமை. கணவன் இல்லை. மூணு பொண்ணுங்க. அம்மா தன்னோட 13 வயசு மகளை 40 வயசு பணக்காரருக்குக் கட்டிவெச்சுட்டாங்க. நம்ம நாட்டுல மட்டுமில்லை. ஆப்கானிஸ்தான்ல நடக்குறது பயங்கரம். சாப்பாட்டுக்கே வழியில்லாம பெண் குழந்தைகளை வயசான முதியவர்களுக்குக் கல்யாணம் பண்ணிவெக்கிற கொடுமையெல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு.

நண்பர்களே... நான் உடனே இது சம்பந்தமாக தேடிப் பாா்த்தேன். ஒரு புள்ளிவிவரத்தை பார்த்ததும் மனசு அப்படியே நொறுங்கிப் போயிடுச்சு போங்க. `உலக அளவுல ஒவ்வொரு நிமிடமும் 23 குழந்தைத்திருமணங்கள் நடக்குது'ன்னு சொல்லுது அந்தப் புள்ளிவிவரம். அதாவது மூணு விநாடிக்கு ஒரு திருமணம். நினைச்சாலே மலைப்பா இருக்கு. பல நேரங்கள்ல வறுமை, குடும்பச் சூழல் காரணமாக கட்டாயப்படுத்தித்தான் குழந்தைகளுக்குத் திருமணம் செஞ்சுவெக்கறாங்க.

குழந்தைத் திருமணங்கள் நடக்குறதுக்கான காரணங்கள் ஏராளம். வீட்டுல வயசான பாட்டியோ, தாத்தாவோ படுத்த படுக்கையா இருப்பாங்க. அவங்க கண்ணை மூடுறதுக்குள்ள பேத்திக்குக் கல்யாணம் செஞ்சு பார்த்துடணும்னு ஆசைப்படுவாங்க. அதுக்காக நடக்கும். சொந்தம், சொத்து விட்டுப்போயிடக் கூடாதுன்னு கல்யாணம் பண்ணிவெக்கறதும் நடக்குது. பொண்ணோ, பையனோ காதலிக்கிறாங்களா... குடும்ப மானம், சாதி கவுரவம் போயிடக் கூடாதுன்னு கல்யாணம் பண்ணி வெச்சுடுவாங்க. ஜோசியக்காரங்க சொல்றாங்கங்கறதுக்காகவும் சில கல்யாணங்கள் நடக்குது. இவ்வளவு ஏன்... நம்ம கடமையை முடிச்சா போதும்னு குழந்தைக்குக் கல்யாணம் பண்ணிவெக்கறவங்களும் இருக்காங்க. இந்தியாவுல கொரோனா காலத்துல மிக அதிக எண்ணிக்கையில குழந்தைத் திருமணங்கள் நடந்திருக்குன்னு சொல்றாங்க.

`15 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியை வளர்ந்த அல்லது முதிர்ந்த ஆணுக்குத் திருமணம் செய்து கொடுப்பதுதான் குழந்தைத் திருமணம்'னு ஒரு காலத்துல வரையறுக்கப்பட்டிருந்தது. குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் - 2006, `18 வயசுக்குக் கீழ் இருக்குற பொண்ணுக்கும், 21 வயசுக்குக் கீழ் உள்ள ஆணுக்கும் நடைபெறும் திருமணங்களை `குழந்தைத் திருமணம்'னு சொல்லுது.

இந்தியாவுலயே மத்தியப் பிரதேசத்துலதான் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடக்குதுன்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. சமீபத்துல தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு ஆய்வறிக்கை, தென்னிந்தியாவுல அதிகமாகக் குழந்தைத் திருமணங்கள் நடக்கும் ஐந்து மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கு. அதுல முதல் இடத்துல ஆந்திர மாநிலம் இருக்கு. நாலாவது இடத்துல தமிழ்நாடு இருக்கு. முதல் இடத்துல இருக்குற ஆந்திராவுல நடக்கும் குழந்தைத் திருமணங்களின் சதவிகிதம் 29.3. இரண்டாவதா இருக்குற தெலுங்கானா சதவிகிதம் 23.5. மூணாவதா கர்நாடகா - 21.3 சதவிகிதம். நாலாவதா தமிழ்நாடு - 12.8 சதவிகிதம். கடைசியா கேரளா - 6.3 சதவிகிதம். 15-ல் இருந்து 19-வயசுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கல்யாணமாகி குழந்தைகள் இருக்கறதும் இந்த ஆய்வுல தெரியவந்திருக்கு.

ஒரு காலத்துல சொந்தம் விட்டுப்போயிடக் கூடாது; பையன் கட்டுக்குள்ள இருக்கணும்; கெட்ட சகவாசம் சேர்ந்துடக் கூடாதுன்னு குழந்தைத் திருமணங்கள் நடந்துச்சு. ஏன்... பாரதியாருக்கே குழந்தைத் திருமணம்தான் நடந்துச்சு. அப்போ செல்லம்மாவுக்கு ஏழு வயசு. இப்போ பெண்கள் நல்லா படிச்சு, கைநிறைய சம்பாதிக்கிற இந்தக் காலத்துலயும், நகரங்களில் கூட குழந்தைத் திருமணங்கள் நடக்குறது அதிர்ச்சியா இருக்கு. சரி... எப்படியும் பையனுக்கோ, பொண்ணுக்கோ கல்யாணம் பண்ணிவெச்சுத்தானே ஆகணும். அதை சின்ன வயசுலயே செஞ்சு வெச்சுடலாமேன்னு ஒரு கேள்வி எழலாம். ஆனா, அதேநேரத்துல குழந்தைத் திருமணத்தால ஏற்படுற விளைவுகளையும் பார்க்கணுமில்லையா?

சின்ன வயசுலயே நடக்குற கல்யாணத்தால பெண்ணோட உடல்நலம் ரொம்பவும் பாதிக்கப்படும். பக்குவமில்லாத வயசுல ஏற்படுற உடலுறவு, குழந்தைப்பேறு அந்தப் பெண்ணோட உடலையும் மனசையும் ரொம்பவே பாதிச்சுடும். கர்ப்பப்பையில புண் ஏற்பட்டு, அது பாதிக்கப்படலாம். கருச்சிதைவு ஏற்படலாம். அறிவு முதிர்ச்சியோ, சமூகத்துல உரிய அங்கீகாரமோ கிடைக்காத அந்த வயசுல நடக்குற கல்யாணத்தால பெண் குழந்தைகள் குடும்ப வன்முறைக்கு ஆளாவாங்க. சில சமயம் பாலியல் துன்புறுத்தலும் அவங்களுக்கு நடக்கும். இந்தக் காரணங்களால அவங்க தனிமைப்படுத்தப்படுவாங்க.

ஒரு பொண்ணுக்கு சின்ன வயசுலயே கல்யாணம் நடக்குதா... `இனிமே நீ படிச்சு என்ன ஆகப்போகுது... படிப்பை விட்டுடு'ன்னு சொல்லிடுவாங்க பெற்றோர். கல்வியும் போய், அது மூலமா கிடைக்கிற வேலைவாய்ப்பும் போய் அந்தப் பொண்ணு சொந்தக் கால்ல நிக்க முடியாம, காலம்பூரா கணவனையோ, பெற்றோரையோ சார்ந்து வாழுற நிலைமைக்குத் தள்ளப்படுவாங்க. வறுமையில் இருந்து அவங்களால மீளவே முடியாது. முழு உடலும் வளர்ச்சியடையாத அந்தச் சூழ்நிலையில ஒரு பொண்ணு குழந்தை பெத்துக்கறதால தாயும் சேயும் மகப்பேறின்போது இறக்கும் சதவிகிதமும் அதிகமாகுதுன்னு சில புள்ளிவிவரங்கள் சொல்லுது.

குழந்தைத் திருமணம்கிறது குழந்தைகளின் மேல நிகழ்த்தப்படுற ஒரு வன்முறை. அது, அந்தத் தலைமுறையை மட்டும் பாதிக்கிறதில்லை. அடுத்தடுத்த தலைமுறையையும், அவங்களோட வாரிசுகளோட வாழ்க்கையையும் பாதிச்சுடும். பல தன்னார்வலர்களும், அரசும் பல குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியிருந்தாலும், அது முழுசுமா நின்னு போயிடலை. கிராமங்கள்ல, பழங்குடியினச் சமூகங்கள்ல, தலித் குடும்பங்கள்ல குழந்தைத் திருமணம் நடக்குறதுக்குக் காரணம் அவங்க கல்வி கற்கும் சூழல் இல்லாததுதான்னு சொல்றாங்க சமூக ஆர்வலர்கள். பல மலைவாழ் கிராமங்கள்லயும், உள்ளடங்கியிருக்குற கிராமங்கள்லயும் போக்குவரத்து, கல்வி இதுக்கெல்லாம் வசதி செஞ்சு குடுத்தா குழந்தைத் திருமணங்கள் நடக்குறது குறையும்.

பொதுவாவே நம்ம மக்களுக்குப் பெண் குழந்தைன்னா ஒரு அலட்சியம். அவங்களோட முன்னேற்றத்துலயும், அவங்களுக்கான உரிமையிலயும் யாரும் அக்கறை காட்டுறதே இல்லை. இதுவும் இந்த மாதிரி திருமணங்களுக்கு ஒரு காரணம். ஒரு பெண் குழந்தைக்கு நிகழ்த்தப்படுற திருமணம் சமூக அநீதி. இதை முதல்ல புரிஞ்சுக்கணும். ஆணும் பெண்ணும் சமம்கிற எண்ணம் முதல்ல பெற்றோருக்கு வரணும். ஆண் குழந்தைன்னா ஒரு நியாயம், பெண் குழந்தைன்னா ஒரு நியாயம்கிற எண்ணத்தை அவங்க மாத்திக்கணும். இருபால் குழந்தைகளையும் சமமா வளர்க்கணும்.

`பொம்பளைப் புள்ள வெச்சுருக்கே... காலா காலத்துல கல்யாணம் செஞ்சு குடுக்குற வழியைப் பாரு...' என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். பல காலமாக சீக்கிரமே பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் செஞ்சுவெக்கணும்கிற எண்ணம் வேரூன்றி ப்போய் கிடக்கு.

`குழந்தைத் திருமணத்துல ஈடுபடுறவங்களுக்கு இரண்டு வருஷம் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் அபராதம் விதிக்கப்படும்'னு குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006 சொல்லுது. ஆனா, அதைப் பலரும் கண்டுக்கறதே இல்லை. பல இடங்கள்ல இப்படியான திருமணங்கள் நடக்குறப்போ, விவரம் தெரிஞ்சவங்ககூட `நமக்கென்ன வந்துச்சு'ங்குற மனோபாவத்தோட அதை வெளியில சொல்லாம விட்டுடுறாங்க. இந்த மனநிலை மாறணும். இந்த சமூக அநீதியை வெளிச்சத்துக்குக் கொண்டு வர ஒவ்வொருத்தரும் முன்வரணும்.

இந்தத் திருமணங்களைத் தடுக்கணும்னா பள்ளிக்கூடத்துலயே இதனால ஏற்படுற பாதிப்புகளை விளக்கிச் சொல்லணும். பல குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. பள்ளிகள்ல குழந்தைகளுக்கு வழிகாட்டுறதுக்காகவே அரசு கவுன்சிலர்களை நியமிக்கலாம். வளரிளம் பருவத்துல எப்படி இருக்கணும், வாழ்க்கைத்திறனை எப்படி மேம்படுத்திக்கறது, எதிர்காலத்தை சிறப்பாக ஆக்கிக்க லட்சியம்னு ஒண்ணு இருக்கணும்னு மாணவர்களுக்கு வழிகாட்டலாம். முக்கியமா அனைத்துத் திருமணங்களையும் பதிவு செய்யறதைக் கட்டாயமாக்கணும்.

பத்து, பதினஞ்சு வயசு குழந்தைக்கு என்ன தெரியும்? ஓடி, ஆடி விளையாடுற வயசு. பல புதுப் புது விஷயங்களைக் கத்துக்குற பருவம். அவங்களுக்குள்ள எதிர்காலத்தை எப்படி வடிவமைச்சுக்கணும்னு ஒரு லட்சியத்தை விதைக்கிறதை விட்டுட்டு, அவங்களுக்குக் குழந்தைத் திருமணம் செஞ்சுவெக்கிறதுங்கறது நிச்சயம் வன்முறைதான். நீங்களே கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க இவங்களே குழந்தைங்க இவங்களுக்கு குழந்தை பொறந்தா அதை இவங்க எப்படி வளா்ப்பாங்க, பாா்த்துக்கங்க. பெற்றோா் ஓரளவு உடல், அறிவு முதிா்ச்சியோட இருந்தாத்தானே பொறக்கிற குழந்தையுடைய ஆரோக்கியம், அறிவு வளா்ச்சி, கல்வி, விளையாட்டுன்னு பல துறையில் மேம்பாடுடைய குழந்தைகளை உருவாக்குவாங்க நல்ல சமுதாயம் அப்பதான் உண்டாகும் இல்லையா.

அவங்க உரிய வயசுக்கு வந்த பிறகு, வாழ்க்கையோட நெளிவு சுளிவுகளைத் தெரிஞ்சுக்கிட்டதுக்குப் பிறகு அவங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வெப்போமே... என்ன குறைஞ்சு போச்சு? முதல்ல குழந்தைகளைக் குழந்தைகளா இருக்கவிடுவோமே... அவங்களோட உரிமையிலயும் சுதந்திரத்துலயும் நாம தலையிடாம இருப்போமே... இதுக்கான உறுதிமொழியை இப்போவே எடுத்துக்குவோம் நண்பர்களே!

தொடர்புக்கு:

drpt.feedback@gmail.com

Tags:    

Similar News