சிறப்புக் கட்டுரைகள்

கருணை தெய்வம் காஞ்சி மகான்-48

Published On 2022-06-29 09:43 GMT   |   Update On 2022-06-29 09:43 GMT
  • கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
  • மகான்களது உணவு முறை பெரும்பாலும் எளிமையாக இருக்கும். அவர்களது பிக்ஷைக்கான பொருட்களை ஸ்ரீமடத்திலேயே சேகரித்து வைத்திருப்பார்கள்.

மகான்களும் தெய்வங்களும் நினைத்து விட்டால் போதும்... அருளையும் பொருளையும் கொட்டோ கொட்டென்று கொட்டுவார்கள். அதற்குரிய பக்தியும் சிரத்தையும் நமக்கு வர வேண்டும்.

வாழ்க்கைக்கு அருளும் தேவை; பொருளும் தேவை. 'அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?' என்று கேட்டால், எதைக் கேட்பீர்கள்? பொருள் கிடைத்தால் அருள் கிடைக்காது. காரணம் பொருள் மயக்கத்தில் மூழ்கிவிடுவோம். பொருள் நிரம்பி இருக்கிற பலருக்கு அருள் தேடுவதில் அலட்சியம் இருக்கலாம்.

ஆனால், அருள் கிடைத்து விட்டால் ஆனந்தம். இறைவனது அருள், சம்பந்தப்பட்டவருக்குத் தேவையான பொருளையும் கொடுத்து விடும். எனவே, மனிதர்களாகிய நாம் 'உன் அருள் இருந்தாலே போதும் பெரியவா...' என்று அருளை வேண்டித்தான் ஒவ்வொரு தினத்தையும் ஆரம்பிக்க வேண்டும். பெரியேரி தியாகராஜனும் அப்படித்தான்.

மகா பெரியவாளிடம் அருளை மட்டுமே வேண்டினார். அவரது கடைக்கண் பார்வைக்கு ஏங்கினார். அவரது விரலசைவையும் கண்ணசைவையும் உத்தரவாக எடுத்துக்கொண்டார். 'பெரியவாளே கதி' என்று வாழ்ந்தார்.

தன் பக்தனான தியாகராஜனின் உண்மையான பக்தியையும் பரவசத்தையும் பார்த்தார் பெரியவா. எல்லாவற்றையும் கொடுத்தார். நிம்மதியான வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை வழங்கினார்.

இதோ, 1993-ம் ஆண்டு தியாகராஜனும், அவரது மனைவியும் பெரியவா தரிசனத்துக்கு காஞ்சி ஸ்ரீமடம் வந்திருந்தார்கள். தியாக ராஜனது வருகை மகானுக்குத் தெரிவிக்கப்பட்டது. அழைப்பும் வந்தது.

அடுத்த அருள் மழை தியாகராஜன் மேல் பொழியத் தொடங்கியது. ''இன்னிக்கு அவன்தான் பிக்ஷை... சொல்லிடுங்கோ...'' -இது பெரியவா திருவாக்கு. இது எப்பேர்ப்பட்ட ஒரு பேறு.

ஒருவருக்கு உணவிடுவதே பெரும் புண்ணியத்தைத் தரும். அதுவும் உலக நலனுக்காக தியானிக்கும் மகான்களுக்கு உணவிட்டால்..? அது எத்தனை பெரிய புண்ணியம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

'பிக்ஷை' என்றால் என்ன? மகா பெரியவா போன்ற மகான்களுக்கு உணவிடுவதை 'பிக்ஷை' என்று அழைப்பார்கள். சிலர் இதை 'பிச்சை' என்பார்கள். பிக்ஷையை அப்படிச் சொல்லக் கூடாது.

மகான்களது உணவு முறை பெரும்பாலும் எளிமையாக இருக்கும். அவர்களது பிக்ஷைக்கான பொருட்களை ஸ்ரீமடத்திலேயே சேகரித்து வைத்திருப்பார்கள். இந்தப் பொருட்களை வழங்குவதற்கென்றே சில குடும்பங்கள் இருந்தன.

மகான்களின் பிக்ஷைக்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை ஸ்ரீமடத்தில் கட்டி விட வேண்டும். தவிர, ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள் மற்றும் தரிசனத்துக்கு வருகிற பக்தர்களின் உணவுக்குத் தேவையான காய்கறிகள், அரிசி, பருப்பு போன்ற இன்ன பிற தானியங்களையும் வாங்கித்தரலாம்.

எவர் பிழை செய்கிறாரோ அன்றைக்கு அவர் குடும்பத்துடன் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு வந்து விடுவார்கள். மகான்களுக்கு அருகே இருக்கலாம். அவர்களது பரிபூரண ஆசிகளும் கிடைக்கும்.

'இன்னிக்கு அவன்தான் பிக்ஷை...' என்று பெரியவா சொன்னதும், தியாகராஜனுக்குப் பரவசம் தாங்க முடியவில்லை. ஆனாலும், அன்றைய தினம் தான் குடும்பத்துடன் வரவில்லையே என்று ஏங்கினார். காரணம், அவரது வாரிசுகளை அழைத்து வரவில்லை. குழந்தைகள் இல்லாமல் இந்த பிக்ஷையில் கலந்து கொள்வது அவ்வளவு உசிதமாக இருக்காது என்று தீர்மானித்தார்.

எனவே, தனக்குத் தகவல் தந்த ஸ்ரீமடத்துத் தொண்டரிடம், ''இன்னிக்கு நான் என் குழந்தைகளோட வரலை... அதனால இன்னொரு நாளைக்கு வெச்சுக்கலாமே... பெரியவாகிட்ட சொல்ல முடியுமா?'' என்று மெள்ள இழுத்தார்.

இந்தத் தகவலை பெரியவாளிடம் போய்த் தெரிவித்தார் அந்தத் தொண்டர். அதற்குப் பெரியவா, ''அவன் இங்கே பிக்ஷை பண்ணினாலே அந்தப் பலன் பசங்களுக்கும் போயிடும். போய் அவன்கிட்டச் சொல்லு'' என்றார்.

போன வேகத்திலேயே திரும்பி வந்த தொண்டர், பெரியவாளின் இந்த பதிலை தியாகராஜனிடம் தெரிவித்தார். இதைக் கேட்டவர் பூரித்துப் போனார். ஆனால், அடுத்த கவலை வந்தது. தியாகராஜன் பணம் எதுவும் கொண்டு வரவில்லை. பிக்ஷைக்குப் பணம் கட்ட வேண்டும். இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும் என்று முன்கூட்டித் தெரியாததால் அதற்கான முன்னேற்பாடுகளுடன் அவர் வரவில்லை.

கையில் பணம் இல்லாமல் எப்படி பிக்ஷை செய்வது? யோசித்தவர் தன் முன் நின்று கொண்டிருக்கிற தொண்டரிடம் சொன்னார். ''பணம் கொண்டு வரலையே... நான் எப்படி பிக்ஷை பண்ணுவேன்?''

இந்தக் கேள்வியும் பெரியவாளிடம் போனது. இதற்கு, ''ஸ்ரீமடத்து மேனேஜர்கிட்ட போய் கேட்கச்சொல்லு. அவர் பணம் தருவார். அவனைப் பிற்பாடு திருப்பித் தரச் சொல்... மேனேஜரை அவனுக்கு நன்னா தெரியும்'' என்று பதில் சொன்னார் பெரியவா.

பணத்தை இடுப்பில் முடிந்து கொண்டு எத்தனையோ பேர் பிக்ஷை செய்ய காத்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் தியாகராஜனுக்கு இன்று கிடைத்திருக்கிறது. எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாமல் வந்தவருக்கு அத்தனை ஐஸ்வரியங்களையும் அள்ளி வழங்குகிறார் பெரியவா.

'இந்த மகானுக்கு பிக்ஷை அளிக்கிற பாக்கியம் எங்களுக்குக் கிடைக்காதா?' என்று பலரும் ஏங்குவார்கள். ஆனால், அவர்களுக்கு அத்தனை சுலபத்தில் பெரியவா உத்தரவு கிடைத்து விடாது. இங்கே பாருங்கள்... ஒட்டுமொத்த குடும்பத்தோடும் வரவில்லை... பிக்ஷைக்குத் தேவையான பணத்தையும் கொண்டு வரவில்லை. ஆனால், பெரியவாளின் பதில் என்ன என்று பார்த்தீர்களா? இதுதான் அனுக்கிரகம்!

அதாவது, ஒருவரைத் தன் சந்நிதிக்கு வரவழைத்து அருளை வாரி வாரி வழங்குவது! அன்றைக்குப் பெரியவா திருச்சந்நிதியில் பெரியேரி தியாகராஜனுக்கு அப்படித்தான் அமைந்தது.

பிறகென்ன... ஸ்ரீமடத்திலேயே ஸ்நானம் செய்து, தம்பதி சமேதராக பிக்ஷைக்குத் தயாரானார் தியாகராஜன். பிக்ஷையும் முடிந்தது.

பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார் தியாகராஜன். ''வருடாந்திர மகசூல் பணத்தை எந்த அக்கவுண்ட்ல கட்டிண்டு இருக்கே?'' -பெரியவா கேட்டார்.

அதாவது, தியாகராஜன் தானமாகக் கொடுத்த இரண்டு ஏக்கர் நிலத்தில் விளைகிற பொருளை விற்று வருகிற தொகையை ஸ்ரீமடத்தின் எந்த அக்கவுண்ட்டில் செலுத்துகிறாய் என்று கேட்டார் பெரியவா.

''எஸ்டேட்ல கட்றேன் பெரியவா...'' - இது தியாகராஜன்.

எஸ்டேட் அக்கவுண்ட் என்பது ஒரு கணக்கு. அதாவது பொதுவான கணக்கு. அதற்குப் பெரியவா சொன்னார், ''அதுல வேண்டாம்... ஸ்பெசிபிக் டிரஸ்ட்டுன்னு போட்டு இனிமே அதுல கட்டிடு...''

அதாவது இதில் வருகிற வட்டியைக் கொண்டு ஸ்ரீமடத்தின் காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதன் பிறகு, வருடாந்திர மகசூல் தொகையை அந்த ஸ்பெசிபிக் டிரஸ்ட்டில் தியாகராஜன் குடும்பம் கட்டி விடும். இந்தக் கணக்கு தியாகராஜன் பெயரிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மிக சொற்பொழிவாளர் பி.சுவாமிநாதன்

தியாகராஜனின் 2-வது மகனான அருண்குமார் இன்றைக்கும் இந்த பணியை செய்து வருகிறார். இவருக்கு இப்போது வயது 63. இதில், இன்னொரு பாக்கியத்தையும் இந்த குடும்பத்துக்கு கொடுத்தார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். என்ன தெரியுமா?

பெரியவா சித்தி ஆன பிறகு ஒரு முறை பிக்ஷாவந்தனத்துக்குத் தியாகராஜன் குடும்பம் காஞ்சி ஸ்ரீமடம் வந்தது. அப்போது இவர்களிடம் ஸ்ரீஜெயேந்திரர் சொன்னார், ''உன்னோட பிக்ஷாவந்தனத்தன்னிக்கு மகா பெரியவா அதிஷ்டான பூஜையையும் வெச்சுக்கோ.''

அதில் இருந்து மகா பெரியவா அதிஷ்டான பூஜையும் சேர்ந்து கொண்டது. காஞ்சி ஸ்ரீமடத்தின் பரிபூரண அருளை தியாகராஜனது குடும்பம் இன்றைக்கும் அனுபவித்து வருகிறது.

பெரியவாளின் அருளுக்கு பாத்திரமான தியாகராஜனின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளைப் பார்த்தோம். 'என் வாழ்க்கையில் எல்லாமும் பெரியவாதான்' என்று வாழ்ந்து வந்தவர் இவர்.

பக்தனின் மனதை எக்ஸ்ரே போல் ஊடுருவிப் பார்ப்பவர்கள் மகான்கள். எனவேதான், அவர்களிடம் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்க வேண்டும். அத்தகைய உண்மைக்கும் விசுவாசத்துக்கும் கிடைத்த பரிசைத்தான் தியாகராஜனின் குடும்பம் இன்றளவும் அனுபவித்து வருகிறது. ஆனந்தத்துடன் வாழ்ந்து வருகிறது.

(தொடரும்)

swami1964@gmail.com

Tags:    

Similar News