சிறப்புக் கட்டுரைகள்

கமலி ஸ்ரீபால்


மருத்துவம் அறிவோம்: உடல்நலம் பேணுவோம்- 239

Published On 2022-06-27 12:16 GMT   |   Update On 2022-06-27 12:16 GMT
  • இளவயதினர் இன்று முகத்தினை சுத்தம் செய்து பளிச் சென்று வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர்.
  • நொடிக்கு நொடி நம் மனம் மாறுவதால் பலமுறை ஒரே நாளில் நாம் ஊக்கம் குறைந்து காணப்படுகிறோம்.

ஒரு மனிதனுக்கு நிமிர்ந்த தோற்றம் வேண்டும் என்றால் அவன் முதுகெலும்பு நன்கு உறுதியாய் இருக்க வேண்டும். நடப்பதைக் காட்டிலும் நின்று கொண்டே இருப்பது தண்டு வடத்திற்கு கூடுதல் சிரமத்தினை தரும். அதேபோல் அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதும் தண்டுவடத்திற்கு அதிக சிரமத்தினை தரும். நிற்க வேண்டிய அவசியம் ஏற்படும் பொழுது அவ்வப்போது சற்று நடக்கத்தான் வேண்டும். அதேபோல் அமர்ந்து வேலை செய்யும் நேரத்திலும் மேஜை, நாற்காலி, கால் வைக்கும் இடம் போன்றவற்றை உங்கள் உயரத்துக்கு ஏற்றாற்போல் அமைத்துக்கொள்ள வேண்டும்.

பல் தேய்க்கும் பொழுதுகூட, மற்றொரு கையினால் சற்று சுவற்றினை பிடித்துக் கொண்டு தேய்க்கும் பொழுது தண்டு வடத்திற்கு அதிக சுமை இருக்காது. கார் ஓட்டுனர்கள் வண்டியின் சுழல் சக்கரத்தின் பின்னாலேயே இருக்க வேண்டி உள்ளது. இவர்கள் சுழல் சக்கரத்தின் மீது அதிகம் சாய்ந்து இடைவெளியினை இறுக்கமாக வைத்துக்கொள்ளக் கூடாது.

பாத்திரம் கழுவும் பொழுது அதிகம் முன்புறம் சாய்ந்து குனிந்து நின்றுகொண்டு பாத்திரம் தேய்க்கக் கூடாது. ஹைஹீல்ஸ் எனப்படும் உயர காலணிகள் மிக அதிகமான முதுகு வலியினைக் கொடுக்கும் என்பதனை நினைவில் கொள்க.

கடைக்கு சென்று சாமான் வாங்கி தூக்கி வருகின்றீர்களா? ஒரு கையில் மட்டும் சாமான்களை தூக்கக்கூடாது. தோள் பட்டை வலி, கழுத்து வலி என பாடாய் படுத்திவிடும். மாறாக இரு கைகளில் சமமான அளவு எடையினை பகிர்ந்து இரு கைகளாலும் தூக்க வேண்டும். அதற்காக மிக அதிக எடைகளை சுமக்கக் கூடாது. தரையினை மாப் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.குழந்தைகள் பைகளை முதுகில் சுமக்கும்போது இருபக்க தோளில் மாட்டிக் கொள்வது நல்லது.

சர்க்கரைதான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் என சொல்கின்றோம். அதனை பற்றி அதிகம் அறிந்து கொண்டோம். சதா சர்க்கரைக்குள் அல்லது சர்க்கரை உணவினில் ஈ, எறும்பு போல் ஊறிக் கொண்டிருக்கும் நபர்களை சர்க்கரையை முதலில் நிறுத்துங்கள் என்று அறிவுறுத்தும் பொழுது முதல்நாள் குடிப்பழக்கம் உடையவர் மதுவை நிறுத்துவது போல தலைவலி இருக்கும். ஆனால் உடல் மட்டும் முன்னேற ஆரம்பிக்கும். கெட்ட நுண்ணுயிர்கள் கட்டுப்பாட்டில் வரும். ஒரு வாரம் தாக்குபிடித்து சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் உடல் வேகமான முன்னேற்றத்தினை பெறும். உடல் உள் உறுப்புகளில் வீக்கம் குறையும். இன்சுலின் சீராக இயங்கும். உப்பிய முகம் தெளிவு பெறும். ஒரு மாதம் நேரடி சர்க்கரை, இனிப்பு பதார்த்தம் என்று இல்லாமல் இருந்து விட்டால் உடல் எடை குறையும். குடல் ஆரோக்கியம் பெறும்.

ஆறு மாதம் இவ்வாறு இருந்தால் நீரிழிவு நோய் பிரிவு 2 வகை பாதிப்பின் அபாயம் நன்கு குறையும். இப்படியே ஒரு வருடம் செல்ல இருதயம் வலிவு பெறும். பல பாதிப்புகள் எட்டா தொலைவுக்கு ஓட்டம் பிடிக்கும். இளமை தோற்றம் பெறுவீர்கள். வாழ்க்கை இனிமையாகும். இதனை தெரிந்த பிறகும் சர்க்கரையின் பெயரைக்கூட சொல்லாமல் இருப்போம். கூடவே முழு தானிய உணவு நார்சத்து, காய்கறி என்று ஆகிவிட்டால் ராஜா ராணியே நீங்கதான். அதிக கார்போஹைட்ரேட், அதிக சர்க்கரை கலந்த பானகம் கண் பார்வையினையும் பாதிக்கக் கூடும்.

சிலருக்கு தூங்கும்போது வாயில் இருந்து பக்கவாட்டில் சல்வா (எச்சில்) வழியும். சிலருக்கு சற்று கூடுதலாக இருந்து தலையாணியை நனைத்து விடும். பொதுவில் தூங்கும் போது முக தசைகள் தளர்ந்து இருப்பதால் விழுங்கும் முறையும் தடை பட்டு விடுகின்றது. அதில் சல்வா சேரும்போது வெளிவருகின்றது. இதுவே தொடர்ந்து இருக்குமானால் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே. மிக அதிகமான சல்வா வெளியேற்றம் இருந்தால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளதா? என்பதனையும் மருத்துவர் பரிசோதிப்பார். மூக்கடைப்பு கூட காரணமாக இருக்கலாம். பக்க வாதம் ஏற்பட்டவர்களுக்கும் இவ்வாறு ஏற்படலாம். இந்த சல்வா வழிதல் தூக்கத்தில் இருக்குமாயின் சில வீட்டு முறைகளையும் கூடவே செயல்படுத்தலாம்.

வெது வெதுப்பான குளியல், ஷவர் இவை மூக்கினை சுத்தமாக்க, நல்ல காற்று உள் வாங்கி, வெளி விட உதவும். சிறிதளவு யூக்லிப்டஸ் எண்ணை முகர்ந்தல் அல்லது லேசாக தடவிக் கொள்ளுதல் சுவாசம் நன்கு இயங்க உதவும்.

கொஞ்சம் எடையினை குறைத்து விடலாம். தலையணையை சற்று உயர்த்தி வைத்துக் கொள்ளலாம். சில சின்ன வழக்கங்களை மாற்றிக்கொண்டால் நம் ஆரோக்கியம் கூடும். அவற்றினை பார்த்தால் இவ்வளவு ஈசியா என்று தோன்றும். அவற்றினை பார்ப்போமா. சிலர் யோசனை செய்தாலோ, டென்ஷன் ஆனாலோ கை, கால்களை கடித்து பிய்த்து குதறி வைத்து ரணமாக வைத்திருப்பார்கள். இது பார்க்க அநாகரிகமாக இருப்பதோடு அநேக கிருமிகளையும் கிடங்கு போல் சேர்த்து வைக்கும்.

காதை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் பஞ்சாக இருந்தாலும் காதில் கடப்பாரையை கொண்டு பேத்து எடுப்பது போல எடுத்து விடுகின்றனர். இதனால் காது வெகுவாய் பாதிக்கப்பட்டு, காது கேளாமை பிரச்சினைகளோடு வருகின்றனர். தவிர்த்து விடலாமே. மாதம் ஒருமுறை பல் தேய்க்கும் பிரஷ்ஷினை மாற்றி விடலாமே. பாலிஷ் செய்வது பல் பாதுகாப்பிற்கு மிக அவசியமாகி விட்டது.

இளவயதினர் இன்று முகத்தினை சுத்தம் செய்து பளிச் சென்று வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். உண்மை தான் அதற்காக பாத்ரூம் தரையினை தேய்ப்பது போல காரமான கிரீம்களைக் கொண்டு அதிகமாய் தேய்த்து தோலுரிந்து நிற்கக் கூடாது. கண்டிப்பாய் சரும நிபுணரிடம் சென்றால் உங்கள் சருமத்திற்கு சரியானது எது என புரியும்.

பட்டு துணியில் தலையணை உறை தைத்து போட்டுக் கொண்டால் முகமும், தலை முடியும் நன்கு இருக்கும். பருத்தி உறை கூட முகத்தினை வறண்டு விட செய்யும். இதெல்லாம் ஓவரா இருக்கே என்று நீங்கள் சற்று முறைக்கின்ற மாதிரி தெரியுது. ஆனால் நான் சொல்வது நிஜம். நம்புங்க.

மிக சமீபமாக கொரோனா, நம் நாட்டில் இந்தியாவில் சற்று கூடுகின்றது. கூடவே நன்கு குணம் பெறுவதும் 98 சதவீதம் உள்ளது.டெல்டா பிரிவினைக் காட்டிலும் ஒமைக்ரான் பிரிவு அதிக காலம் உடலில் தங்குவதாகக் கூட லண்டன் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாதிப்பு நீங்கிய சில காலத்திற்கு பிறகும் பலருக்கு தூக்கமின்மை, சோர்வு, காதில் இரைச்சல், கண் பார்வை மங்கி இருப்பது போன்றவை இருப்பதாக கூறப்படுகின்றது. எனவே தான் மாஸ்க் அணிதல், கை-கால்களை சுத்தமாய் வைத்திருத்தல், சமூக இடைவெளி, தேவையின்றி அதிகம் வெளியே சுற்றுவது இவற்றினை தவிர்க்குமாறு மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது.

சிறு விஷயங்கள் தரும் பெரும் ஊக்கங்கள்:-

நொடிக்கு நொடி நம் மனம் மாறுவதால் பலமுறை ஒரே நாளில் நாம் ஊக்கம் குறைந்து காணப்படுகிறோம். காரணம் அத்தனை சுற்றுப்புற தாக்குதல்கள், பலரின் கடும் பேச்சுகள், நடக்கும் சில நிகழ்வுகள் பலரின் சில தீய எண்ண அலைகள் என்று பல வகைகளில் ஒருவருக்கு தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றது. காலையில் கண்ணாடி பார்க்கும் பொழுது அநேகமாக பலரும் தனது தோற்றத்தில் சில குறைகளை கண்டு பிடிப்பர். அதுவே போதும் அவர்களுக்கு நாள் முழுவதும் மனச்சோர்வு அளிக்கும். யார் தன்னை பார்த்து யதார்த்தமாக சிரித்தாலும் அவர்கள் தன் குறையினை கண்டு தான் சிரிக்கின்றனர்என தவறாக புரிந்து கொள்வர். தாழ்வு மனப்பான்மையால் எப்பொழுதும் சோகத்திலும் இருப்பர். தியானம், யோகா இதில் ஈடுபடுபவர்கள் அேநகமாக இந்த மாதிரியான தாக்குதல்களில் இருந்து தப்பித்து விடுவார்கள்.நல்ல உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் திடகாத்திர மனது இருக்கும். ஆனால் கொஞ்சம் மனம் போன போக்கில் வாழ்பவர்கள் தோற்றத்திற்கு அதீத ஆசை கொள்பவர்களுக்கு இந்த மனச்சோர்வு எளிதில் ஏற்பட்டு விடும்.

இப்படிபட்டவர்கள் காலையில் கண்ணாடி பார்க்கும் போது 'ஹாய்' என உங்கள் உருவத்திற்கு நீங்களே மென்மையாய் கை கொடுத்து கொள்ளுங்கள். அந்த நொடியிலேயே தேவையற்ற சிந்தனைகள் நீங்கி புத்துணர்ச்சி பெற்று விடுவீர்கள். 'ஹாய்' என மற்றவரின் கையினை நம் கையால் தட்டிக் கொள்வது நாகரீக உலகம் என்று தோன்றினாலும் அதன் பொருள் ஆக்கப்பூர்வமான எண்ண அலை ஏற்படும் என்பதுதான் இதன் பொருள்.

இன்னொரு ரகசியம் தெரியுமா? நீங்கள் வலது கை பழக்கம் உடையவர் என்றால் நீங்கள் வலது கையால் தான் பிரஷ் கொண்டு பல் தேய்ப்பீர்கள். சரி தானே? உங்கள் இடது கையால் பல தேய்த்துப் பாருங்கள். அப்படி செய்தால் உங்கள் மூளை புதிதாக செயல்படும்.

இப்படி செய்யும் செயல்களை அவர்கள் 'neurobics' என்கின்றனர். 'Aerobics' செய்வது உடலுக்கு என்பது போல் 'Neurobics' நரம்பு மண்டலத்திற்கான முன்னேற்றமாம்.

முதுைம தோற்றமா?

வயதிற்கு மீறிய முதுமை தெரிகின்றதா? இந்த சில தவறுகளை நம்மை அறியாமல் செய்கின்றோமா என்று பார்ப்போமா? ஸ்ட்ராங் டிகாஷன் டிகிரி காப்பி நாள் ஒன்றுக்கு அதிகம் குடிக்கின்றோமா? அடிக்கடி கண்களை கைகளால் தேய்க்கின்றோமா? குப்புற கவிழ்ந்து வயிற்றின் மேல்தான் படுக்கின்றோமா? ரொம்ப மேக் அப் பயன்படுத்துகின்றோமா? காரமான சோப்பு கொண்டு குளிக்கின்றோமா? தவிர்த்து விடுவோம். சரியாகிவிடும்.

குறைபாடுகளை காட்டும் அறிகுறிகள்

நமக்கே நம் உடலில் சில அறிகுறிகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். அதனை அலட்சியம் செய்து விடாமல். கவனித்தால் உடனே சரி செய்து விடலாம். நல்ல நிறம் என்பது வேறு. வெளிறிய தோற்றம் என்பது வேறு. அவ்வாறு ஏற்படுவது வைட்டமின் பி12 குறைபாடாக இருக்கலாம். அசைவ உணவுகாரர்கள் மீன் உணவினை எடுத்துக் கொள்ளலாம். சைவ உணவுகாரர்கள் மருத்துவர் ஆலோசனை மூலம் பி12 சத்து மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இருவருமே மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

வறண்ட உடையும் சருமம் பயோடின் பி7 சத்து குறைபாடாக இருக்கலாம். சற்று உப்பிய கண்கள் இருந்தால் அயோடின் சத்து குறைபாடு உள்ளதா? என்பதனையும் பரிசோதிக்க வேண்டும். வெளிறிய உதடுகள் இரும்பு சத்து குறைபாடினைக் கூறலாம். ரத்தம் கசியும் ஈறுகள் வைட்டமின்றி 'சி' சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். நன்கு தூங்கி எழுந்தபின் இருக்கும் சோர்வு கூட வைட்டமின் பி12 சத்து குறைபாடாக இருக்கலாம். எந்த அறிகுறிக்கும் அலட்சியம் செய்யாது, தானே சுய வைத்தியம் செய்யாது மருத்துவர் ஆலோசனை பேரில் சிகிச்சை பெறுவது ஆரோக்கிய தரத்தினை உயர்த்தும்.

ஆரோக்கியத்துக்கான வழிகள்

உலகில் ஜப்பானியர்கள் மட்டும் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளோடும் இருப்பதனை கண்ட விஞ்ஞானிகள் சும்மா இருப்பார்களா? சுவிட்சர்லாந்தில் மக்கள் ஆரோக்கியத்தோடு 80 வயது வரை இருக்கின்றார்கள். ஜப்பானில் பூகம்பங்கள் நிறைந்த நாட்டில் மக்கள் ஆரோக்கியத்தோடு 84 வயது வரை இருக்கின்றனர். இதற்கு காரணமாக ஆய்வுகள் கூறுவது:-

அவர்கள் எப்பொழுதும் சிறிய அளவிலேயே உண்கின்றனர். 75 சதவீதம் வயிறு நிரம்பும் வரை மட்டுமே உண்ணுகின்றனர். அவர்கள் உணவில் அன்றாடம் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணை சேர்கின்றது. உடற்பயிற்சி என்பதனை விடவும் கூட அதிகம் நடக்கின்றனர். சோயாவால் ஆன தோபுவை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். நாமும் அப்படியே செய்வோமே.

Tags:    

Similar News