சிறப்புக் கட்டுரைகள்

பிரபு திலக்


ஆறுமனமே ஆறு: வரலாறு முக்கியம் அமைச்சரே- 38

Published On 2022-06-26 12:03 GMT   |   Update On 2022-06-26 12:03 GMT
  • கடந்த காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல், நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ள முடியாது.
  • நாம் வரலாற்றை உருவாக்குபவர்கள் அல்ல; வரலாறுதான் நம்மை உருவாக்குகிறது.

`நாம் வரலாற்றை உருவாக்குபவர்கள் அல்ல; வரலாறுதான் நம்மை உருவாக்குகிறது.' - மார்ட்டின் லூதர் கிங்.

இன்னிக்கு ஒருத்தா், தன்னோட அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, எள்ளு தாத்தானு வரிசையா பேருங்களைச் சொன்னா அதுவே பொிய ஆச்சர்யம். இன்னிக்கி பல பேருக்கு தாத்தா பேரைத் தாண்டி முன்னாலே போகத் தெரியறதில்லை. வம்சாவளியைத் தெரிஞ்சுவெச்சுருக்கறதும் ஒரு வகையில வரலாற்றைத் தெரிஞ்சுக்குற மாதிரிதான். அது குடும்ப வரலாறு.

அதே போலத்தான் நம் மாநிலத்தோட வரலாறு. நாட்டின் வரலாறு. உலக வரலாறு. எல்லாம் நமது ஊா், சிற்றூா், தெரு எல்லாவற்றுக்கும் பின்னால் வரலாறு இருக்கிறது. ஏாிகள், குளங்கள், நீா்த்தேக்கங்கள், கால்வாய்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் பின்னால் வரலாறு இருக்கிறது. அவற்றைப் பற்றி படித்தோ விசாாித்தோ தொிந்து கொள்வதும் கல்விதான்.

ஆனால் இங்கு என்ன நடக்கிறது அந்தத் தெருக்களின் பெயரை அழிக்கிறோம், சுருக்குகிறோம், மாற்றுகிறோம். நமக்குப் பிடித்த புதிய தலைவா்களின் பெயா்களைச் சூட்டுகிறோம். வளரும் நகரத்தின் சுற்றிப் படரும் புதிய விாிவுகளின் குறுக்குத்தெரு மெயின் தெரு என்று வைக்கப்படும் பெயா்களுக்குப் பதில் புதிய பெயா்களை அங்கே சூட்டலாமே.  இதை ஏன் யாரும் எடுத்துச் சொல்வதில்லை? நமக்கு சாித்திர உணா்வு குறைவாங்கற சந்தேகம் வருதே.

சரி, வரலாறு ஏன் முக்கியம்? `கடந்த காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல், நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ள முடியாது'ன்னு சொல்றாங்க அறிஞர்கள்.

இந்த உலகத்துல என்னென்ன துறைகள் இருக்கோ, அவை எல்லாத்துக்கும் வரலாறுதான் முக்கியம்னு சொன்னா ஏத்துப்பீங்களா... ஆனா, அதுதான் உண்மை. உதாரணத்துக்கு, இயற்பியல்னு ஒரு துறையை எடுத்துக்குவோமே... ரைட் பிரதர்ஸ்னு ஒரு சகோதரர்கள்தான் மனுஷனால வானத்துல பறக்க முடியும்னு முதல் விமானத்தைக் கண்டுபிடிச்சாங்க. அந்த வரலாற்றைப் பின்பற்றி, அந்த வழிமுறைகளைத் தெரிஞ்சுக்கிட்டு, அதன் அடிப்படையில உருவாக்கப்பட்ட விமானங்கள்தான் இன்னிக்கு வானத்துல பறந்துக்கிட்டு இருக்கு.

ஆதி மனுஷன் சிக்கி முக்கிக் கல்லுல தீப்பொறி வரும்னு கண்டுபிடிச்ச வரலாறு தெரிஞ்சதாலதான் நாம லைட்டர், கியாஸ் வரைக்கும் வந்திருக்கோம். நிலத்தைத் தோண்டினா தண்ணி கிடைக்கும், அதைக் கிணறாப் பயன்படுத்தலாம்கிற வரலாற்றைத் தெரிஞ்சுக்கிட்டதாலதான் நாம போர்வெல் வரைக்கும் வந்திருக்கோம். இப்பிடி பிசிக்ஸ், அஸ்ட்ரானமி, ஜியாக்ரபினு அத்தனை துறைக்கும் வரலாறு முக்கியமா இருக்கு. இலக்கிய வரலாறு, சமூக வரலாறு, இலக்கண வரலாறு, பண்பாட்டு வரலாறுன்னு சொல்லிக்கிட்டே போகலாம்.

உலகத்துல அது எந்த இனக்குழுவாகவும் இருக்கட்டும்... வரலாறு தெரிஞ்சாத்தான் அதோட பண்பாடு, பழக்க வழக்கமெல்லாம் தெரியும். அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் அங்கே குடியேறி சில நூறு ஆண்டுகள்தான் ஆகுது. ஆனா, அமெரிக்க அரசு வரலாற்றுச் சின்னங்களை முறையா பாதுகாத்து, பராமரிக்குது. ஆபிரகாம் லிங்கன் பிறந்த இடத்துலேருந்து, மார்ட்டின் லூதர் கிங் `நான் ஒரு கனவு காண்கிறேன்'னு பேசின இடம் வரைக்கும் அங்கே நினைவுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருது.

1939 -– 1945 க்குள் நடந்த இரண்டாம் உலகப் போா் தொடா்புடைய சின்னங்களையும் அப்படித்தான் பராமாிக்கிறாங்க. அந்தச் சின்னங்கள் இருக்கிற இடத்துக்கு ஒரு 100 கி.மீ தூரத்திலிருந்தே தொடங்கி சாலையோரத்தில் இன்னும் 50கி.மீ தூரைத்தில் 20 கி.மீ. தூரத்தில்னு போய் சற்றுத் தொலைவில் இப்படி ஒரு சின்னம் இருக்குதுங்கற அறிவிப்புப் பலகைகளும் வழி காட்டிப் பலகைகளும் வந்த படி இருக்கும். தொல்பழங்கால வரலாறுடைய சீனாவும் அப்படித்தான். கி.மு.209 வாக்கில் புதையுண்ட சுடுமண் போா் வீரா் படை தொடங்கி பற்பல வரலாற்றுச் சின்னங்களையும் போற்றிப் பாதுகாக்கின்றனா்.

ஆனால் தொல்பழங்காலந்தொட்டு வரலாறு உடைய இந்தியாவுல அப்படியான நம்பத்தகுந்த ஆவணங்கள் எல்லா காலகட்டத்துக்கும் இல்லை. அரசவைக் குறிப்புகள், மெய்க்கீா்த்திகளை எல்லாம் அப்படியே வரலாறுன்னு எடுத்துக்க முடியுமா? கல்வெட்டைக் கூட அப்படியே ஏத்துக்க முடியாது. பிற தரவுகள் சாட்சியா கெடைக்கணும்.

இந்திய வரலாற்றை எழுதிய ஆங்கில ஆசிரியா்கள் நமது பராம்பரியக் கலைகள், மருத்துவம் போன்ற பல மேன்மையான விஷயங்களை கணக்குல எடுத்துகிட்டிருப்பாங்களா? இல்லே, இங்கே இருந்த நாகரீகமற்ற மக்கள் தொகுதியை நாங்க தான் நாகரீகமானவங்களாக மாத்தினோம்ங்கற தொனி இருக்குமா? யோசிக்கணும். இந்தக் குழப்பத்திலே போதாதுன்னு நமக்கு கால நிா்ணயம் பண்றது வேறே பொிய பிரச்சினையாக இருக்குது. இதையெல்லாம் சாி பாா்த்து கடந்த காலத்தை ஆழமாக ஆராய்ச்சி செய்து நம்ப வரலாற்றை நாம படைக்கணும்.

வரலாறுங்கறது ஆட்சி செய்த மன்னா்களும் போா்களும் மட்டுமில்ல. அந்த கால மக்கள் வாழ்ந்த வாழ்க்கையும் வரலாறு தான். அதையும் சாியாக எழுதணும். உத்திரமேரூா்ல செப்பேடு கெடைச்சது. அந்தக் காலத்திலேயே ஜனநாயகம் இருந்ததுக்கு அது அடையாளம்னு திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருக்காங்க. ஆனா, ஆய்வாளா்கள் அந்தப் பட்டயத்துலே சமஸ்கிருதம் படிச்சவங்களும், சொத்துவாி கட்டியவங்களுக்கும் மட்டும் குடவோலை அனுமதிக்கப்பட்டிருக்கறதனாலே அது அங்கே இருந்த அக்கிரகாரத்துல வசிக்கிறவங்களுக்குள்ளே ஒரு தலைவரைத் தோ்ந்தெடுக்க ஏற்படுத்தப்பட்ட முறை நாடு முழுவதுக்குமானதில்லைங்கறாங்க. "எப்பொருள் யாா் யாா் வாய்க் கேட்பினும்"ங்கற குறள் ஞாபகத்துக்கு வருவதில்லே!

ஏன், சாதாரணக் குறிப்புகூட மனிதா்கள் வாழ்ந்த இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் தொல் பழங்கால மனித இனம் வாழ்ந்த தற்றுக்கான தரவுகள் தேடும் பணி இன்றும் தொடரும் பணியாக இருக்கிறது.

இந்தியாவுல, நம்மோட மரபிலே சுவாரஸ்யமான புராணங்கள் பலது இருக்குது. ஆனா அவற்றை அப்படியே சரித்திரங்கள்னு எடுத்துக்க முடியுமா? புராணங்களிலே புதைந்திருக்கிற அடையாளங்களை, குறியீடுகளை சாித்திரச் சான்றுகள் உறுதிப்படுத்தணும் இல்லையா? அதுக்கான முறையான பதிவுகள் ஆராய்ச்சி மூலமா உறுதிப்படுத்த வேண்டியிருக்கு.

உ.வே.சுவாமிநாதய்யர் புண்ணியத்துல, அவர் ஆவணப்படுத்திக்கொடுத்த தமிழ் இலக்கியங்கள் மூலமாகத்தான் நாம சிலப்பதிகாரம் உட்பட பல இலக்கியங்களை, அவற்றின் வரலாற்றைத் தெரிஞ்சுக்கிட்டிருக்கோம்.

தமிழ் வரலாறு, பண்பாடு, அன்றாட வாழ்க்கை முறை, மதிப்பீடுகள் எப்படி இருந்ததுங்கறதுக்கான கல்வெட்டு போல பல பதிவுகள் பழங்கால தமிழ் இலக்கியத்திலேயும் இருக்குது.

இன்னிக்கு நாம தொிஞ்சுகிட்டிருக்கிற "கீழடி" பத்தி திருமுருகாற்றுப்படையிலேயே குறிப்பிருக்கறதா சொல்றாங்க. ஆக, வரலாறு திரும்பத் திரும்ப எழுதப்படணும், விவாதிக்கப்படணும், முறையா ஆவணப்படுத்தப்படணும். இதுக்கு இலக்கியங்களோட துணையும் உதவும்.

நம் வரலாற்றைத் தெரிஞ்சுக்கிட்டா, அது ஒரு பண்பாட்டை, மக்கள் சமுதாயத்தை உருவாகுறதுக்கு வழிவகுக்கும். நம்மைச் சிந்திக்கத் தூண்டும்.

எத்தனை நூற்றாண்டுக்கு முற்பட்ட சிற்பமாக ஓவியமாக இருந்தாலும் அது மேலே கீறி வைக்கறதையும் யாா் யாரைக் காதலிக்கிறாங்கன்னு எழுதி இதயம் வரைஞ்சு அம்பை குறுக்கே போடற கேவலமான நடவடிக்கையை விட்டுடணும். பத்து நூற்றாண்டுக்கு முன்னே யாரோ, ஒரு சிற்ப மேதை வடிச்ச சிற்பத்துக் கீழே தன் பேரை எழுதறது தப்பில்லையா?

இப்ப பல இடங்களிலே சிற்பங்களுக்கு இரும்புக் கம்பிவேலி போட்டு வச்சிருக்காங்க இது, நல்லாவா இருக்கு? இசைத்தூண்கள் கோயில்களிலே பாா்த்திருப்பீங்க. உலகத்துலே வேறே எங்கேயும் இல்லாத இசைப் படிக்கட்டுகள் தாராசுரம் கோயில்ல இருக்கு. இது தமிழா்களாகிய நமக்கு எவ்வளவு பெருமை? ஆனா அந்தப் படிகளும் சிறைக் கைதிகள் போல கம்பிச் சிறைக்குள்ளேதான் காராக்கிருக வாசம் பண்ணுது. வரலாற்றை முழுமையா தெரிஞ்சுவெச்சிருந்தோம்னா, ஆவணப்படுத்தி இருந்தோம்னா எவ்வளவோ நல்லா இருக்கும். இப்போதாவது அதைச் செய்யணும். நம்ம தொல்லியல்துறை இதுல ரொம்பவே கவனம் செலுத்திக்கிட்டு இருக்குங்கறதுதான் நிஜம். பல வரலாற்றுச் சுவடுகளை இந்தத் துறை ஆவணப்படுத்தியிருக்கு.

அது தான் வரலாற்றை சாியாக அறிந்து கொள்வது. வரலாற்றை திருப்பிப் போட முடியாது. அது கால நதியின் போக்கிலே பயணிக்கும். நதிகள் ஒரு போதும் திரும்பிப் பாா்க்காது இல்லையா? சிம்பிளா ஒரு ஐடியா. ஒண்ணுமில்லை... சென்னை, எழும்பூா்ல இருக்குற மியூசியத்துக்குள்ள ஒரு தடவை போயிட்டு வாங்களேன். நம்ப வரலாற்றுப் பெருமையைத் தொிஞ்சுகிட்டு காலரைத் தூக்கி விட்டுக்குவீங்க. பண்டைய காலத்துல புழக்கத்துல இருந்த நாணயங்கள்ல இருந்து, போர்ல பயன்படுத்தப்படுற ஆயுதங்கள் வரைக்கும் அங்கே நீங்க பார்க்கலாம். இன்னும் ஓலைச்சுவடிகள், பழங்காலத்து ஆபரணங்கள், இந்திய, தமிழ்மக்களின் வாழ்க்கை முறைன்னு நம்ப வரலாற்றுக்கான ஆதாரங்கள் அங்கே கொட்டிக்கிடக்கு.

போய்ப்பாருங்க இன்னும் சொல்லப் போனா நம்ப பழங்கால கோயில்கள் ஒண்ணு ஒண்ணும் வரலாற்று நூல்கள் தான். மதுரை மீனாட்சியம்மன் கோயிலையோ, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலையோ நுட்பமா பாா்த்தா அது புாியும். அந்தக் கோயில்கள்ல பாண்டியர்கள், சோழர்கள் மட்டுமில்ல வேறு பல வரலாறு முக்கியமானதா விஷயங்களையும் பேசறதாலே அவை பேசும் செய்திகள் நம்பத்தக்கதா இருக்கு. பல மன்னர்களின் படையெடுப்பு, அதுலருந்து தப்பி இறை வடிவங்களைக் காப்பாத்தினதுன்னு பல நிகழ்வுகள் இருக்கு. இப்படிப் பல கோயில்கள் நம்ம வரலாற்றுக்கு சான்றாக இருக்கு.

கரிகாலன் கட்டிவெச்ச கல்லணை உலகத்துக்கே தமிழாின் நீா் மேலாண்மை, கட்டுமானப் பொறியியல் திறன் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இப்படி ஒரு அணையைக்கூட கட்ட முடியும்னு உலகத்துக்கே சவால்விட்ட வரலாறு அது. இப்போவும்கூட கல்லணையைக் கொண்டாடுறோம். முல்லைப்பெரியாறு அணை உருவாகுறதுக்குக் காரணமான ஆங்கிலேயர் பென்னிகுக்கை தெய்வமாகவே வழிபடுறாங்க அந்தப் பகுதி மக்கள். அந்த வரலாறு, அந்த மக்களுக்கு மறக்காம இருக்கறதாலதான் இது சாத்தியமாகியிருக்கு.

`வரலாறு முக்கியம் அமைச்சரே'ன்னு சொல்ற வடிவேலு டயலாக் தொடங்கி, `சரித்திரத் தேர்ச்சி கொள்'ங்கிற பாரதியின் வார்த்தைகள் வரை வரலாறு மிக மிக முக்கியம்.

சம்மர் ஹாலிடேஸ்ல எம்.ஜி.எம்., வி.ஜி.பி., ஊட்டி, கொடைக்கானல்னு எங்கெங்கேயோ பிள்ளைகளை கூட்டிக்கிட்டுப் போறோம். சென்னை எக்மோர்ல இருக்குற மியூசியத்துக்கோ, பாரம்பரியம்மிக்க தஞ்சை பெரிய கோயிலுக்கோ கூட்டிக்கிட்டுப் போறோமா... நம்ம வரலாற்றை நம்ம பிள்ளைங்களுக்கு நாமே சொல்லிக் கொடுக்கலைன்னா எப்படி? வரலாறும் முக்கியம் பாஸ். வரலாறுதான் நம்ம முன்னோர்களை, அவங்க செஞ்ச தியாகங்களை, இந்தியாங்கிற ஒரு முழு நாடு உருவான கதையை அவங்களுக்கு எடுத்துச் சொல்லும். உலகத்தைப் புரிஞ்சுக்க வழிகாட்டும். அதுதான் வாழ்க்கைப் பாடத்தையும் அவங்களுக்கு சொல்லித்தரும். அது அவங்க எதிர்காலத்துக்கும் நல்லது!

தொடர்புக்கு:

drpt.feedback@gmail.com

Tags:    

Similar News