சிறப்புக் கட்டுரைகள்

குகை வடிவில் அமைந்த ஜீவசமாதி


null

சென்னை சித்தர்கள்: ஸ்ரீசாது கோபால சுவாமி (வடகரை, செங்குன்றம்)- 82

Published On 2022-06-25 11:13 GMT   |   Update On 2022-06-25 11:15 GMT
  • சித்த வைத்திய சாலை மூலம் நூற்றுக்கணக்கானவர்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்த்தார்.
  • சாது கோபால சுவாமியின் சிறப்புகள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டன.

உயிர்வாழ மூச்சுக்காற்று மிக மிக அவசியம். வாழ்க்கை உள்மூச்சில் தொடங்கி வெளிமூச்சில் முடிவடைகிறது என்று சொல்வார்கள். இந்த உள்மூச்சும், வெளிமூச்சும் தொடர்ந்து நடைபெற்றால்தான் ஒருவர் உயிர்வாழ முடியும்.

ஒருவர் ஒருதடவை உள்மூச்சு எடுத்தால் அவர் சக்தி அதிகரிக்கும். அதேசமயத்தில் ஒருவர் வெளி மூச்சு விடும்போதெல்லாம் அவர் தனது சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார் என்று அர்த்தமாகும். அதாவது வெளிமூச்சு அதிகரித்தால் ஒருவரது வாழ்நாள் காலம் குறையத்தொடங்குகிறது என்று சொல்வார்கள்.

அதனால் தான் பேச்சை குறைத்து மூச்சை கவனிக்க வேண்டும் என்று சித்தபுருஷர்கள் சொல்லி உள்ளனர். மூச்சை எப்படி கவனிப்பது என்பதற்காக வாசியோகத்தை நமக்கு கற்றுத் தந்துள்ளனர். வாசியோகம் பயின்ற ஒருவரால் மரணமில்லா பெருவாழ்வு வாழமுடியும்.

சுருக்கமாக சொல்வதென்றால் யார் ஒருவர் தனது சுவாசத்தை நெறிப்படுத்தி முறையாக வைத்துக்கொள்கிறாரோ அவர்கள் வாழ்க்கை இன்பங்கள் நிறைந்ததாக இருக்கும். சுவாசத்தை அடக்க அடக்க நல்ல மனநலத்தோடும், உடல் நலத்தோடும் வாழமுடியும் என்பதற்கு சித்தர்களும், அவரை பின்பற்றியவர்களும் உதாரணமாக இருந்தனர். இப்போதும் சிலர் இருந்துகொண்டு இருக்கின்றனர்.

ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் தாங்கள் அடைந்துள்ள பகுதியில் இப்போதும் மிகப் பெரிய அதிர்வலைகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அந்த சித்தர்கள் மரணமில்லா பெருவாழ்வை எட்டிப் பிடித்திருப்பதுதான். இந்த நிலையில் சமாதி அடைந்த சித்தர்கள் தங்கள் உடலை லட்சக் கணக்கான அணுக்களாக பிரிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.

இந்த ஆற்றலுக்கு அடிப்படையாக இருப்பது சுவாச பயிற்சி தான். இந்த சுவாச பயிற்சியை எப்படி நெறிப்படுத்த வேண்டும் என்பதை எல்லா சித்தர்களுமே சொல்லிகொடுத்துள்ளனர். கடந்த நூற்றாண்டில் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வடகரையில் வாழ்ந்த சித்த புருஷர் சிவானந்த பரமஹம்சர் மூச்சு பயிற்சியை பற்றி 'சித்த வேதம்' என்ற நூலில் மிக அருமையாக குறிப்பிட்டுள்ளார்.

அதைபடித்து மூச்சுப் பயிற்சியை மேம்படுத்தி ஆயுளை நீட்டித்துக் கொண்டவர்கள் ஏராளம். இதேபோன்று பல நூல்களை சிவானந்த பரமஹம்சர் எழுதியுள்ளார். இதன் காரணமாக அவரிடம் நூற்றுக்கணக்கானவர்கள் சீடர்களாக சேர்ந்து மிகச்சிறந்த ஆன்மீக சேவையாற்றினார்கள்.

சிவானந்த பரமஹம்சர் அடிக்கடி பேசும்போது, 'கடவுள் இருக்கிறார் என்பவர்களுக்கு அவர் எங்கு, எப்படி, எந்த ரூபத்தில் இருக்கிறார் என்பதை உணர்த்தி இறைவனிடம் இரண்டற கலக்கும் வழிகாட்டவே நான் வந்துள்ளேன்' என்று சொல்வார். அதை உறுதிபடுத்தும் வகையில் ஏராளமானோர் சிவானந்த பரமஹம்சரிடம் சீடர்களாக இருந்து நாடுமுழுவதும் பரவி சென்று சேவை செய்தனர்.

அவர்களில் ஒருவர் சாது கோபால சுவாமி. இவரது பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். இவரது குடும்பம் மற்றும் சிறு வயது வாழ்க்கை பற்றிய தகவல்கள் எதுவும் பெரிய அளவில் வெளியில் தெரியவில்லை. 30 வயது நிறைவடைவதற்கு முன்பே இவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

சிறுவயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட இவர் கோவில் கோவிலாக அலைந்தார். காடுகளில் அலைந்து திரிந்து மூலிகைகள் பற்றிய ஞானத்தை வளர்த்துக்கொண்டார். அப்போதுதான் சிவானந்த பரமஹம்சரை சந்தித்து உரையாடினார். அவரிடம் பல ஆண்டுகள் சீடராக இருந்தார்.

பின்னர் ஒரு காலகட்டத்தில் சிவானந்த பரமஹம்சரிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் தமிழகம் வந்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வாசி யோக சேவையும் ஆன்மீக சேவையும், சித்தமருத்துவ சேவையும் செய்தார்.

அந்த வகையில் சென்னை வந்த அவர் புறநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்தார். சுதந்திரத் திற்கு முன்பு சென்னை புறநகர் பகுதியில் ஆங்காங்கே சிறு சிறு கிராமங்களாக இருந்தன. அதில் ஒரு கிராமமாக இருந்த செங்குன்றம் பகுதியில் அவர் சேவையாற்றினார்.

அந்த சமயத்தில் கண்ணப்ப சுவாமிகளும் செங்குன்றம் பகுதியில் புகழ்பெற்றிருந்தார். அவரோடு நெருங்கி பழகிய சாதுகோபால சுவாமி வடகரை பகுதியில் ஒரு இடத்தில் தங்கினார். அந்த இடத்தை அந்த பகுதி மக்கள் வாங்கிக்கொடுத்து தங்க வைத்தனர். அங்கு கோபாலசுவாமி சித்த வைத்திய சாலையை தொடங்கினார். அந்த சித்த வைத்திய சாலைக்கு தனது ஞான குரு பெயரில் 'சிவானந்தா சித்த வைத்திய சாலை' என்று பெயர் சூட்டினார்.

அந்த சித்த வைத்திய சாலை மூலம் நூற்றுக்கணக்கானவர்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்த்தார். தன்னை நாடி வந்தவர்களுக்கு அவர் உடல்நலத்தை குணப்படுத்தியதோடு மூச்சுப்பயிற்சியை போதித்து மன நலத்தையும் மேம்படுத்தினார். இதனால் சாது கோபால சுவாமியின் சிறப்புகள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டன.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவரை தேடி ஏராளமானோர் அங்கு வரத் தொடங்கினார்கள். அந்த சித்த வைத்தியசாலை மூலம் ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற பிரச்சினைகளுக்கு சாது கோபால சுவாமி மிக சிறப்பான சிகிச்சைகள் அளித்தார். குழந்தை பாக்கியம் இல்லாத ஏராளமானோர் அவரிடம் மூலிகை மருந்து வாங்கி சாப்பிட்டு பலன் பெற்றனர். தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்ததால் செங்குன்றம் வடகரை பகுதியில் அவர் தங்கி இருந்த இடத்தில் புதிய பஸ் நிறுத்தம் ஏற்பட்டது. அதோடு அந்த பகுதி சாமியார் மடம் என்றும் அழைக்கப்பட்டது.

மக்கள் வருகை அதிகரிக்கத்தொடங்கிய பிறகு சித்த வைத்திய சிகிச்சை முறைகள் மட்டு மின்றி மக்களை ஆன்மீக பாதைக்கும் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் சாது கோபால சுவாமி ஈடுபட்டார். இதனால் அவரது சாமியார் மடத்துக்கு நாள்தோறும் அடியார்களும் வரத் தொடங்கினார்கள். அவர்கள் மூலம் தினமும் கந்த புராணம், பெரிய புராணம், சிவ புராணம் ஆகியவை பாராயனம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்தன.

மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சான்றோர்கள் அந்த மடத்துக்கு வந்து சொற்பொழிவாற்றி சென்றனர். சாமியார் மடத்தின் ஆன்மீக பணிகள் இவ்வாறு மேம்பட தொடங்கிய பிறகு மக்களுக்கு மனநலம் செய்யும் சேவையையும் சாதுகோபால சுவாமி தொடங்கினார். முக்கிய நாட்களில் எல்லாம் அன்னதானம் கொடுப்பது பிரதான இடத்தை பிடித்தது.

ஒரு காலகட்டத்துக்கு பிறகு தனது குரு சிவானந்த பரமஹம்சர் முக்தி அடைந்த கார்த்திகை மாதம் தீபம் தினத்தன்று மிகப் பெரிய குருபூஜை நடத்தத்தொடங்கினார். அன்றைய தினம் சித்த வைத்திய சாலையில் மிகப்பெரிய ஆன்மீக கச்சேரி நடைபெறும். அதில் பங்கேற்க ஆயிரக்கணக்கானவர்கள் அக்கம் பக்கம் கிராமத்தில் இருந்து திரண்டு வருவார்கள்.

அவர்கள் அனைவருக்கும் சாதுகோபால சுவாமி அன்னதானம் வழங்குவார். சுமார் 3 ஆயிரம் பேர் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு செல்வார்கள். சாதுகோபால சுவாமி தொடங்கி வைத்த இந்த பழக்கம் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கார்த்திகை மாதம் குரு வழிபாடு போன்று மாசி மாதம் திருமுறை வகுப்புகளை சாது கோபால சுவாமி நடத்துவார். அப்போது பெரிய புராணம் பாராயணம் செய்யப்படும். இப்போதும் இந்த நடைமுறையை கடைபிடிக்கிறார்கள்.

சாதுகோபால சுவாமியின் சிறப்பை அறிந்த திரை உலக பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், இலக்கிய வாதிகள் அவரை தேடிச்சென்று பலன் அடைந்தனர். சித்த புருஷர்களுக்குரிய அனைத்து ஆற்றல்களையும் பெற்றிருந்த சாது கோபால சுவாமி தன்னை நாடி வந்தவர்களின் தோஷங்களை நீக்கி அருள்புரிந்தார்.

55 ஆண்டுகளுக்கு முன்பு அவர் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். அவரை சித்த வைத்திய சாலையின் ஒரு பகுதியில் ஜீவசமாதி செய்துள்ளனர். பொதுவாக சித்தர்கள் முக்தி பெற்றதும் அவர்களை குகை செய்வது என்பது ஒரு வழக்கமாக உள்ளது. திருமூலர் காட்டிய முறையில் அந்த சமாதி அமைந்திருக்கும்.

அதாவது மிக மிக ஒடுக்கமான நுழைவு வாயில் அமைப்புடன் சிறிய பிரமீடு போன்று ஜீவ சமாதி செய்வார்கள். இந்த அடிப்படையில் தான் சாது கோபால சுவாமிக்கும் ஜீவ சமாதி அமைக் கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினத்தன்று மகாகுருபூஜை நடத்தப்படுகிறது.

இந்த ஜீவசமாதியை தற்போது குமரவேல் முதலியார் பராமரித்து வருகிறார். தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அவர் அங்கு இருப்பார். இதுபற்றி அவர் கூறுகையில், 'என் தந்தை கணபதி முதலியார் தான் சித்தரை பராமரித்து வந்தார். அவர் மூலம் 12 வயதில் நான் சித்தரிடம் அறிமுகமானேன்.

அவரது கருணையால் தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன். எனக்கு 2 தடவை இருதய ஆபரேஷன் நடந்துள்ளது. சாதுகோபால சுவாமி தான் எங்களை வழிநடத்திக்கொண்டு இருக்கிறார்' என்றார்.

வருகிற புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினத்தன்று மிகச்சிறப்பான குருபூஜைக்கு ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். சிறு கூண்டு போன்ற அமைப்பில் ஜீவ சமாதி திகழ்கிறது. சென்னையில் இத்தகைய அமைப்பில் வேறு எங்கும் ஜீவ சமாதி இருப்பதாக தெரியவில்லை.

55 ஆண்டுகளை கடந்தாலும் இந்த ஜீவ சமாதியில் சாதுகோபால சுவாமியின் அருள் அலைகள் நிரம்ப உள்ளன. அங்கு சென்று பார்த்தால் தான் அதன் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும். கேரளாவில் சிவானந்த பரமஹம்சர் முக்தி அடைந்த பிறகு வடகரையில் ஜீவசமாதி செய்யப்பட்டார். அதேபோன்று அவரது சீடர் சாதுகோபால சுவாமி சென்னையில் உள்ள வடகரையில் ஜீவசமாதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செங்குன்றம் பகுதியில் உள்ள இந்த ஜீவ சமாதியை முதன்முதலாக செல்பவர்கள் கண்டு பிடிப்பது சற்று கடினம். செங்குன்றம் மெயின் ரோட்டில் செங்குன்றம் நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்க திருமண மண்டபம் இருக் கிறது. அதன் அருகில் சென்று கேட்டால் வழி சொல்வார்கள்.

அந்த ஜீவ சமாதி அருகில் இருக்கும் ரைஸ் மில்லில் உள்ளவர்களிடம் ஜீவ சமாதியின் சாவி இருக்கிறது. கேட்டு வாங்கி திறந்து வழிபட்டு தியானம் செய்துவிட்டு வரலாம்.

Tags:    

Similar News