செய்திகள்
புற்று நோய் வராமல் பாதுகாக்கும் முத்திரைகள்

ஆரோக்கியம் நம் கையில் - புற்று நோய் வராமல் பாதுகாக்கும் முத்திரைகள்

Update: 2021-10-27 13:18 GMT
புற்று நோய் வராமல் பாதுகாக்கும் முத்திரைகள் தொடர்பாக யோகக் கலைமாமணி பி.கிருஷ்ணன் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இன்றைய  நவீன உலகில் ஒவ்வொரு நாளும் கேன்சர் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.  இது ஒரு கவலை அளிக்கும் விஷயமாகும்.  ஏற்கனவே கேன்சர்க்குரிய யோகச் சிகிச்சை அளித்துள்ளோம். எனினும் நிறைய மாலை மலர் நேயர்கள் தொலைபேசியில் புற்று நோய் வராமல் காக்கும் யோகா முத்திரைகள் வழங்க வேண்டும் என்று கேட்டதால், மீண்டும் புற்று நோய் வராமல் பாதுகாக்கும் பல வகையான யோக முத்திரைகளை கவச முத்திரையாக காண்போம்.

கேன்சர் வர காரணங்கள்

பீடி, சிகரெட், புகையிலை போன்ற போதை வஸ்துக்கள் அடிக்கடி உபயோகிப்பதால் குடல், தொண்டை நுரையீரலில் கேன்சர் வரும்.
நாம் எடுக்கின்ற உணவு, மைதாவினால் ஆன உணவு, அதிக காரம், மசாலா, எண்ணெய் பண்டங்கள் எடுப்பதால் குடலில் கட்டி கேன்சர், ஆசன வாயில் புண், கேன்சர் வர வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு தைராய்டு பிரச்சனையால் ஜீரண மண்டலம் நன்கு இயங்காது.  மாதவிடாய் தள்ளிப்போகும். கழிவுகள் சரியாக வெளியேறாததால் மார்பக புற்று நோய் வருகின்றது.

மனிதனுடைய பண்புகள், எண்ணங்களுக்கு ஏற்ப உடலில் உள்ள இரத்தத்தில், நாளமில்லா சுரப்பியில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கவலை, டென்ஷன், கோபம், பதட்டம், சூழ்ச்சி, எதிர்மறை எண்ணங்கள் அதிகம் இருந்தால் உடலில் இரத்தத்தில் இரசாயன மாற்றம் ஏற்படும்.  இது கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றாமல், கட்டிகளாக உருவாகி, நாளடைவில் கேன்சராக உருவாகின்றது.  எனவே நாம் இன்றைய காலகட்டத்தில் உடலையும், மனதையும் சரியாக இயங்கச் செய்யும், தீய பண்புகளை மாற்றி நல்ல பண்புகளை வளர்க்கும் யோகா முத்திரை தியானத்தை தினமும் பதினைந்து நிமிடங்கள் பயின்றால் நிச்சயமாக உடலும், மனமும் வளமாக இருக்கும்.  தீய எண்ணங்கள் வளராமல் தடுத்து கேன்சர் வராமல் வாழலாம்.

சிலருக்கு கேன்சருக்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கலாம்.  அவர்களும், தாராளமாக, நம்பிக்கையுடன் முத்திரைகளை மூன்று வேளையும் பயிற்சி செய்யுங்கள்.  நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.  நீங்கள் எடுக்கும் மருத்துவச் சிகிச்சையையும் எடுத்துக் கொள்ளுங்கள்.  இதனையும் பயிற்சி செய்யுங்கள் மிக விரைவில் குணமாகும்.

தியான முத்திரை

விரிப்பில் கிழக்கு திசை நோக்கி நிமிர்ந்து அமரவும்.  தரையில் அமரமுடியாதவர்கள், ஒரு நாற்காலியில் அமர்ந்து பயிற்சி செய்யலாம். இடது கை கீழ் அதன்மேல் வலது கையை படத்தில் உள்ளது போல் வைக்கவும்.  இரு கட்டை விரல் நுனிகளும் ஒன்றையொன்று  தொட்டுக் கொண்டிருக்கட்டும்.  கண்களை மூடி தலைமுதல் கால் வரை ஒவ்வொரு தசைகளிலும் மனதை நிறுத்தி அதிலுள்ள டென்ஷன் அனைத்தையும் பூமிக்கு அர்பணித்ததாக எண்ணி தளர்த்திக் கொண்டே வரவும்.  பின் மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுத்து வெளிவிடவும்.  பத்து முறைகள்செய்யவும்.   மூச்சை இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை உள் வாங்குவதாக எண்ணவும். மூச்சை வெளியிடும்பொழுது நமது உடல் மனதிலுள்ள கவலை, டென்ஷன் கோபம் வெளியேறுவதாக எண்ணவும்.  

பின் நெற்றிப் புருவ மையத்தில் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் பத்து நிமிடம் கவனித்து தியானிக்க வும்.  பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.

சூரிய முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் தியானிக்கவும்.பின் மோதிர விரலை மடித்து உள்ளங்கையில் படும்படி வைத்து அதன் மையத்தில் கட்டை விரலை வைத்து இலேசாக ஒரு அழுத்தம் கொடுக்கவும்.  இரு கைகளிலும் செய்யவும்.  ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.  பின் மெதுவாக கண்களை திறந்து கைகளை சாதாரண நிலைக்கு கொண்டு வரவும்.

சூன்ய முத்திரை

நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராகயிருக்கட்டும்.  கண்களை மூடி பத்து வினாடிகள் இயல்பாக  நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். பின் நடு விரலை மடக்கி உள்ளங்கை யில் படும்படி வைத்து அதன் மையத்தில் கட்டை விரலை வைத்து இலேசான ஒரு அழுத்தம் கொடுக்கவும்.  இரு கைகளிலும் செய்யவும்.  ஐந்து நிமிடங்கள் இருக்கவும்  பின் சாதாரண நிலைக்கு வரவும். முதலில் செய்த சூரிய முத்திரை உடலில் எந்தப் பகுதியில் கட்டிகள் இருந்தாலும் கரைத்து விடும். இரண்டாவது செய்த சூன்ய முத்திரை தொண்டையில் கட்டி, கேன்சர் வராமல் பாதுகாக்கும் கவச முத்திரையாகும்.

முகுள முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும்.பின் கட்டை விரல் நோக்கி நான்கு விரல்களையும் குவித்து விரல்களை வானத்தை நோக்கி படத்தில் உள்ளது போல் கைகளை வைக்கவும். ஐந்து நிமிடங்கள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

பிராண முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராகயிருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை படத்தில் உள்ளது போல் வைக்கவும்.  இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும். பின் சாதாரண  நிலைக்கு வரவும்.

ஜலேந்திர பந்தம்

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராகயிருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும்  மூச்சை பத்து வினாடிகள்  கவனிக்கவும். பின் இரு கைகளிலும் சின் முத்திரை படத்தில் உள்ளது போல் செய்யவும்.  மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை உள் இழுக்கவும்.  உடன் மூச்சை அடக்கி குனிந்து தாடையால் தொண்டையில் ஒரு அழுத்தம் படத்தில் உள்ளது போல் கொடுக்கவும்.  பத்து வினாடிகள் மூச்சடக்கிருக்கவும்.  பின் மூக்கு வழியாக மூச்சை வெளிவிட்டு நிமிர்ந்து சாதாரணமாக வரவும்.  இது போல் மூன்று முறைகள் செய்யவும்.

இது தொண்டையில் கட்டிகள், புற்று நோய் வராமல் பாதுகாக்கின்றது. நோய் எதிர்ப்பாற்றல் தரும், தைராய்டு நன்றாக சுரக்கும்.  அதனால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும்.  மார்பு புற்றுக் கட்டிகள் வராது.

நாடிசுத்தி மூச்சு பயிற்சி

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இடது கை சின் முத்திரை வைக்கவும். வலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து வெளியிடவும். பத்து முறைகள்செய்த  பின் இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசியில் மூச்சை மெதுவாக இழுத்து வலது நாசியிலேயே மூச்சை மெதுவாக வெளிவிடவும்.  பத்து முறைகள் செய்யவும்.

பின் வலது நாசியை அடைத்து இடது நாசியில் மூச்சை இழுத்து, இடது நாசியை அடைத்து வலது நாசியில் மூச்சை வெளிவிடவும்.   பத்து முறைகள் செய்யவும். பின் இதேபோல் வலதில் இழுத்து இடதில் வெளிவிடவும் பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.இப்பயிற்சியினால் நுரையீரல் நன்கு இயங்கும். நுரையீரலில் கழிவுகள் தங்காது, கட்டிகள் கேன்சர் வராமல் தடுக்கப்படு கின்றது.

ஓம்கார தியானம்

மனித உடலில் அனாகத ஒலி இதயத்தினுள் ஒலிக்கும் ஓம்காரமாகும்.  ஜெபம் என்றால் வாய்விட்டு உச்சரிப்பது. அஜெபம் என்றால் தானாக ஒலிப்பது.  ஒவ்வொரு மனிதனின் உடலிலும் ஓம் ஒலிக்கின்றது. இந்த ஒலியை நாம் நிமிர்ந்து அமர்ந்து வாய்விட்டு ஓம் என்று சத்தமாக உச்சரிக்க வேண்டும். “ஓ” என்று எவ்வளவு தூரம் ஒலிக்க முடியுமோ வாய்வழியாக உச்சரிக்கவும். அப்பொழுது நமது அடி முதுகுத் தண்டிலிருந்து மூச்சு மேல் நோக்கி வருவதாக எண்ணவும்.  “ ம் ” என்று ஒலிக்கும் பொழுது அந்த உணர்வு உச்சந்தலையிலிருந்து முன்புறமாக நெற்றிப் புருவ மையம் வழியாக இதயத்தினுள் இறங்குவதாக பாவனை செய்து உச்சரிக்கவும்.  பத்து முறை “ஓம்” மந்திரத்தை உச்சரிக்கவும்.  பொறுமையாக உச்சரித்து விட்டு ஐந்து நிமிடம் இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். 


யோகக் கலைமாமணி பி.கிருஷ்ணன் பாலாஜி

இந்த ஓம் கார தியானம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றது. எண்ணங்கள் சுத்தமாகும்.  சொல், செயல், சுத்தமாகும். உடல், மனக் கழிவுகளை அகற்றி வளமாக வாழ வகை செய்கின்றது. மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை ஒரு சிகிச்சையாக எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் காலை, மாலை நம்பிக்கையுடன் பயிற்சி செய்யுங்கள். நிச்சயமாக கேன்சர் வராமல் வாழலாம்.

உணவிலும் ஒரு ஒழுக்கத்தை கடைபிடியுங்கள்.  சாத்வீகமான உணவு, பழம், கீரை வகைகள் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.  உடலுக்கு சரியான ஓய்வு கொடுங்கள். இரவு பத்து மணி முதல் காலை மூன்று மணி வரை நல்ல ஓய்வு கொடுங்கள்.  மனக் கவலை, மன அழுத்தம் இல்லாமல் வாழ தியானமும், பஞ்சபூத சக்தி சரியாக இயங்க முத்திரையையும் தினமும் செய்து புற்று நோய்க்கு இடமளிக்காமல் புன்னகையுடன், பூரிப்பாய் வாழ்வோம்.   
Tags:    

Similar News