இந்தியா

கொல்லப்பட்ட தீபிகா, கணவர் அவினாசுடன்

இளம்பெண்ணை கொலை செய்த கணவர்- ஒன்றரை வயது குழந்தை கதறல்

Update: 2022-06-29 08:02 GMT
  • அவினாஷ், பெங்களூரு விமான நிலையம் அருகே உள்ள உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
  • அவினாசுக்கும், அவரது மனைவி தீபிகாவுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே உள்ள காரகுருசி என்ற இடத்தைச் சேர்ந்தவர் அவினாஷ் (வயது 30). இவருக்கும், கோவை புலியகுளத்தைச் சேர்ந்த தீபிகா (28) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

அவினாஷ், பெங்களூரு விமான நிலையம் அருகே உள்ள உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இதுதொடர்பாக அவினாசுக்கும், அவரது மனைவி தீபிகாவுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. நேற்று மதியம் அவினாஷ் வீட்டில் படுத்து தூங்கினார். பின்னர் எழுந்ததும் குழந்தையை எடுத்து கொஞ்சி கொண்டு இருந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். தூங்கி எழுந்ததும் முகத்தை கூட கழுவாமல் குழந்தையை கொஞ்சுகிறீர்களே என அவர் கூறினார்.

இதனை கேட்டு அவினாஷ் ஆத்திரம் அடைந்தார். அப்போதும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவினாஷ், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தீபிகாவை வெட்டினார். இதில் தீபிகாவின் தலை மற்றும் காலில் அரிவாள் வெட்டு விழுந்து அவர் சரிந்து விழுந்தார்.

அசைவற்று கிடந்த தாயின் அருகே சென்று அவரது குழந்தை கதறி அழுதது. குழந்தையின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தீபிகாவை அவர்கள் மீட்டு பெருந்தல்மன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபிகா இறந்தார்.

இதுகுறித்து மன்னார்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவினாசை கைது செய்தனர்.

Tags:    

Similar News