இந்தியா

புதிய சக்தியுடன் சிவசேனாவை பலப்படுத்துவேன்: பதவி விலகிய உத்தவ் தாக்கரே பேச்சு

Published On 2022-06-30 03:10 GMT   |   Update On 2022-06-30 03:10 GMT
  • நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் கலந்துகொள்ள நான் விரும்பவில்லை.
  • இந்த 2½ ஆண்டுகால ஆட்சியின் மூலம் பால்தாக்கரேவின் ஆசையை நிறைவேற்றி உள்ளேன்.

மும்பை :

முதல்-மந்திரி பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகினார். இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு அவர் பேசியதாவது:-

மகாராஷ்டிராவில் நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் அவுரங்காபாத், உஸ்மனாபாத் பெயர் மாற்றம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தற்போது என்னுடன் 4 மந்திரிகள் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் என்ன ஆனார்கள், எங்கு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை நான் முழு மனதுடன் பின்பற்றுவேன்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மும்பைக்கு அழைத்துவர நான் முயற்சி செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்திற்காக ராணுவத்தினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படலாம் என்பதால் சிவசேனாவினர் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தைரியமாக சட்டசபைக்கு வரலாம், தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். யாரும் அவர்களுக்கு தடையாக இருக்க மாட்டார்கள். இருப்பினும் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் எனக்கு எதிராக வாக்கு அளித்தாலும் அது எனக்கு அவமானமாகும். எனக்கு முதல்-மந்திரி பதவியில் ஆசையில்லை. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வலியுறுத்தியதின் காரணமாக அனுபவம் இல்லாவிட்டாலும் இந்த பதவியை ஏற்றுக்கொண்டேன். ஆனால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் கலந்துகொள்ள நான் விரும்பவில்லை. எனவே நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.

புதிய சக்தியுடன், மறைந்த தலைவர் பால்தாக்கரேவின் ஆசியுடன் கட்சியை மீண்டும் பலப்படுத்துவேன். சிவசேனாவை யாரும் எடுத்து சென்றுவிட முடியாது. இந்த 2½ ஆண்டுகால ஆட்சியின் மூலம் பால்தாக்கரேவின் ஆசையை நிறைவேற்றி உள்ளேன். எனக்கு இவ்வளவு காலம் ஆதரவளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதேபோல எனக்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகள், போலீசார் மற்றும் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News