இந்தியா

படவிழாவில் சில்மிஷம் செய்த நபருக்கு ஓங்கி அறைவிடும் நடிகை.

2 நடிகைகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த நபர்களை கண்டுபிடிக்க மகளிர் ஆணையம் உத்தரவு

Update: 2022-09-29 06:35 GMT
  • படவிழா நடந்த வணிக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  • நடிகைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு சினிமா படவிழா நடந்தது.

இதில் படத்தில் நடித்த 2 நடிகைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து அவர்கள் வெளியே வந்த போது அங்கிருந்த ரசிகர்கள், நடிகைளுடன் செல்பி எடுக்க முயன்றனர்.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் நடிகைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி ஒரு நடிகை சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.

அதில் சினிமா படவிழாவில் பங்கேற்ற தன்னிடமும், தனது சக நடிகை ஒருவரிடமும் ரசிகர்கள் சிலர் தகாத முறையில் நடந்து கொண்டனர். என்னால் எதுவும் செய்யமுடியாத நிலையில், சக நடிகை மட்டும் எதிர்ப்பை காட்டினார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

நடிகையின் பதிவை பார்த்த பலரும் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதில் ஈடுபட்டவர்களை பிடித்து தண்டனை வழங்க வேண்டும் எனவும் கூறினர்.

நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு கேரள மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து போலீசார் பாதிக்கப்பட்ட நடிகையை சந்தித்து விசாரித்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர். இன்னொரு நடிகையிடமும் வாக்குமூலம் வாங்க பெண் போலீஸ் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, படவிழா நடந்த வணிக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம். இதன்மூலம் நடிகைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக நடிகைகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். தற்போது இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News