இந்தியா

சுதந்திர போராட்ட வீரர்களை கொச்சைப்படுத்தும் சுயநல அரசு- சோனியா காந்தி கடும் தாக்கு

Published On 2022-08-15 07:11 GMT   |   Update On 2022-08-15 07:11 GMT
  • நண்பர்களே கடந்த 75 ஆண்டுகளில் நாம் பெரிய அளவில் சாதித்துள்ளோம்.
  • இன்றைக்கு சுயவெறி கொண்ட அரசு நமது சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான தியாகங்களையும், நாட்டின் புகழ்பெற்ற சாதனைகளையும் கொச்சைப்படுத்துகிறது.

புதுடெல்லி:

பா.ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் 7 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் 1947-ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அந்த வீடியோவில் அப்போதைய பிரதமர் நேருவை கடுமையாக சாடி இருந்தது நாட்டின் பிரிவினைக்கும், ஜின்னாவின் நிபந்தனைகளுக்கும் நேரு தலை சாய்த்து விட்டார் என்றும் விமர்சித்து உள்ளது.

இதே கருத்தை பிரதமர் மோடியும் தனது டுவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக குறிப்பிட்டு உள்ளார்.

இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரீகம், விழுமியங்கள், யாத்திரைகள் பற்றி அறிவில்லாதவர்கள் தான் இங்கு நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தவர்களுக்கு இடையே 3 வாரங்களில் எல்லைக்கோட்டை கிழித்து விட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது, 'இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்த தினத்தை தற்போதைய அரசியலுக்கு மோடி பயன்படுத்துகிறார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை சாவர்கர் தொடங்கி வைத்தார். ஜின்னா முடித்து வைத்தார். நவீன கால சாவர்கர்கள் ஜின்னாக்கள் நாட்டை துண்டாட முயன்று கொண்டே இருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மத்திய அரசை கடுமையாக தாக்கி உள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படும் சுயநலம் கொண்ட அரசு என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது 76-வது சுதந்திர தின செய்தியில் சோனியா காந்தி கூறி இருப்பதாவது:-

நண்பர்களே கடந்த 75 ஆண்டுகளில் நாம் பெரிய அளவில் சாதித்துள்ளோம். ஆனால் இன்றைக்கு சுயவெறி கொண்ட அரசு நமது சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான தியாகங்களையும், நாட்டின் புகழ்பெற்ற சாதனைகளையும் கொச்சைப்படுத்துகிறது. அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

வரலாற்று உண்மைகளை தவறாக சித்தரிப்பதையும், மகாத்மா காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல், அபுல்கலாம் ஆசாத் போன்ற தலை சிறந்த தலைவர்களை அரசியல் ஆதாயங்களுக்காக பொய்யின் அடிப்படையில் களத்தில் நிறுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்.

இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.

Tags:    

Similar News