இந்தியா

விசாகப்பட்டினத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவி, வாலிபர் கடலில் குதித்து தற்கொலை

Update: 2022-08-13 06:22 GMT
  • விசாகப்பட்டினம் ரிஷி கொண்ட கடற்கரையில் வாலிபர் மற்றும் இளம்பெண் பிணம் மிதப்பதாக எம்.வி.பி போலீசாருக்கு தகவல் வந்தது.
  • போலீசார் கடற்கரைக்குச் சென்று அங்கு கரை ஒதுங்கி இருந்த பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் நந்தியால் பகுதியை சேர்ந்தவர் வெங்கட் ரெட்டி (வயது30). இவர் மேல் படிப்பு படிப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விசாகப்பட்டினம் வந்து அறை எடுத்து தங்கி படித்து வந்தார். விசாகப்பட்டினம் வந்த வெங்கட்ரெட்டி அதன் பிறகு தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதேபோல் விஜயநகரம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா (வயது 25). இவர் விசாகப்பட்டினத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து வந்தார்.

வெங்கட் ரெட்டி, திவ்யா இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை விசாகப்பட்டினம் ரிஷி கொண்ட கடற்கரையில் வாலிபர் மற்றும் இளம்பெண் பிணம் மிதப்பதாக எம்.வி.பி போலீசாருக்கு தகவல் வந்தது.

போலீசார் கடற்கரைக்குச் சென்று அங்கு கரை ஒதுங்கி இருந்த பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தது திவ்யா மற்றும் வெங்கட் ரெட்டி என தெரியவந்தது. அவர்களின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வெங்கட் ரெட்டி மற்றும் திவ்யா பெற்றோருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News