இந்தியா

456 கோடீஸ்வர வேட்பாளர்கள்- பா.ஜ.க. வேட்பாளர் ரூ.661 கோடியுடன் முதலிடம்

Published On 2022-11-29 09:14 GMT   |   Update On 2022-11-29 09:14 GMT
  • 6 வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான அளவில் சொத்துகள் தங்களிடம் உள்ளதாக பதிவு செய்துள்ளனர்.
  • 449 வேட்பாளர்கள் மட்டுமே கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றுள்ளனர்.

குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்னும் தனியார் அமைப்பு ஆய்வு செய்தது.

அப்போது ருசிகர தகவல்கள் கிடைத்தன. அந்த தகவல்களை அந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதன் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குஜராத் சட்டசபை தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள 1,621 பேரில் 456 பேர் கோடீஸ்வரர்கள். இதில் பா.ஜனதாவின் 154 வேட்பாளர்களும், காங்கிரசின் 142 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி கட்சியின் 68 வேட்பாளர்களும் கோட்டீஸ்வரர்களாகும்.

இவர்களில் பா.ஜனதாவை சேர்ந்த ஜெயந்தி படேல் என்ற வேட்பாளரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.661 கோடியாகும். மேலும் அவருக்கு ரூ.233 கோடிக்கு கடன் உள்ளதாக அவருடைய வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பா.ஜனதா வேட்பாளர் பல்வந்த் ராஜ்புத் சொத்து மதிப்பு ரூ.372 கோடியாகும். அதற்கு அடுத்த இடத்தில் உள்ள ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் அஜித்சிங் தாக்குரின் சொத்து மதிப்பு ரூ.342 கோடியாகும். போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.56 கோடியாகும்.

வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 6 பேர் தங்களிடம் எவ்வித சொத்துக்களும் இல்லை என்று கூறியுள்ளனர். 6 வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான அளவில் சொத்துகள் தங்களிடம் உள்ளதாக பதிவு செய்துள்ளனர்.

வேட்பாளர்களில் 449 பேர் பட்டதாரிகள். 42 வேட்பாளர்கள் பள்ளிக் கூடம் பக்கமே போகவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்கள் கல்வி கற்கவில்லை என தெரிவித்துள்ள னர். 85 பேர் 5-ம் வகுப்பு வரை கல்வி பயின்று உள்ளனர். வேட்பாளர்களில் 997 பேர் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வி பயின்றுள்ளனர்.

449 வேட்பாளர்கள் மட்டுமே கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News