இந்தியா

அவரது குடும்பத்தினரும், ராணுவ வீரர் சந்திரசேகர் ஹர்போலாவின் உடலை கொண்டு வந்த ராணுவ வீரர்களும்.

சியாச்சின் பனிப்பகுதியில் 38 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவ வீரரின் உடல் கண்டெடுப்பு

Published On 2022-08-18 02:23 GMT   |   Update On 2022-08-18 02:23 GMT
  • சியாச்சின் பகுதி, உலகத்திலேயே உயரமான போர்க்களமாக உள்ளது.
  • ராணுவ வீரரின் உடல், லே நகருக்கு கொண்டுவரப்பட்டது.

புதுடெல்லி :

சந்திரசேகர் ஹர்போலா என்ற அந்த வீரர், கடந்த 1984-ம் ஆண்டு தனது சக வீரர்கள் 19 பேருடன் அங்கு ரோந்து சென்றபோது ஒரு பனிச்சரிவில் சிக்கினார்.

அதில் 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், 38 ஆண்டுகளுக்கு பின் தற்போது ராணுவ வீரர் சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது உடலுடன் மற்றொரு உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றாலும், அது யாருடையது என்று தெரியவில்லை.

சந்திரசேகர் ஹர்போலாவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கொண்டு சென்று ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை ராணுவம் மேற்கொண்டது. நேற்று அவரது உடல், லே நகருக்கு கொண்டுவரப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்டுவானி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சந்திரசேகர் ஹர்போலாவின் குடும்பத்தினர் வசிக்கின்றனர் அங்கு முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும். இத்தனை ஆண்டுகள் கழித்து சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் கிடைத்திருப்பது தங்கள் துக்கத்தை கிளறிவிட்டிருந்தாலும், ஒருவிதத்தில் நிம்மதி அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சியாச்சினில் ஒரு ராணுவ வீரரின் உடல் பல ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறையல்ல. துக்காராம் வி.பாட்டீல் என்ற இந்திய ராணுவ வீரரின் உடல், அவர் மாயமான 21 ஆண்டுகள் கழித்து கடந்த 2014-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சியாச்சின் பகுதி, உலகத்திலேயே உயரமான போர்க்களமாக உள்ளது. இந்த கொடும் பனிப்பகுதியை பாதுகாக்கும் முனைப்பில் இந்திய-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எதிரெதிராக நின்றுகொண்டிருக்கின்றனர்.

ஆனால் இங்கு பரஸ்பர மோதலைவிட, பனிப்புயல்களாலும், பனிச்சரிவுகளாலும் இரு நாட்டு வீரர்களும் இறப்பதே அதிகம் என்பதுதான் விந்தையான சோகம்.

இங்கு கடந்த 2012-ம் ஆண்டு நடந்த பெரும் பனிச்சரிவில் சிக்கி 129 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோன்ற விபத்தில் இந்திய தரப்பில் 2016-ம் ஆண்டில் 10 வீரர்களும், 2019-ம் ஆண்டில் 4 வீரர்களும் பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News