இந்தியா

ராகுல் காந்தி

விடுமுறை நாட்களை முன்னிட்டு ராகுல் காந்தி நடைபயணம் ரத்து

Published On 2022-10-03 06:14 GMT   |   Update On 2022-10-03 07:59 GMT
  • மீண்டும் ராகுல்காந்தி 6-ந் தேதி நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளார்
  • சோனியா, ராகுல் இருவரும் இணைந்து நடைபயணம் மேற்கொள்வதால் கர்நாடகாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த உள்ளனர்.

பெங்களூரு:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை கடந்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். கேரளா மாநிலம் வழியாக அவரது பாத யாத்திரை பயணம் தொடர்ந்தது.

தற்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். அவரது நடைபயணம் இதுவரை சுமார் 630 கி.மீ. தொலைவை நிறைவு செய்து உள்ளது.

இன்று (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு ராகுல்காந்தியும், காங்கிரஸ் தொண்டர்களும் மைசூரில் நடைபயணத்தை தொடங்கினார்கள். இன்று காலை 11 மணிக்கு அவரது நடைபயணம் மாண்டியா மாவட்டத்துக்குள் சென்றது.

ஸ்ரீரங்கபட்டினத்தில் அவரது நடைபயணத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மாலை பாண்டவர்புரத்தில் அவரது நடைபயணம் முடிகிறது. இதையடுத்து நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் நடைபயணத்துக்கு ஓய்வு அளிக்க ராகுல்காந்தி முடிவு செய்து உள்ளார்.

நாளை ஆயுதபூஜை, நாளை மறுநாள் விஜயதசமி என்பதால் 2 நாட்களும் நடைபயணத்தை ராகுல்காந்தி நிறுத்தி உள்ளார். இன்று மாலை நடைபயணம் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் விமானம் மூலம் கூர்க் மலைப்பகுதிக்கு ராகுல் செல்ல உள்ளார்.

காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா காந்தியும் இன்று டெல்லியில் இருந்து கர்நாடகாவுக்கு வந்தார். அவரும் கூர்க் பிராந்தியத்துக்கு செல்கிறார். அங்குள்ள தனியார் ஓட்டலில் சோனியாவும், ராகுலும் தங்குகிறார்கள்.

அடுத்த 2 நாட்கள் சோனியா, ராகுல் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அங்கு தங்கியிருந்து காங்கிரசின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க உள்ளனர்.

மீண்டும் ராகுல்காந்தி 6-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளார். அப்போது அவருடன் சோனியாவும் நடைபயணத்தில் கலந்து கொள்கிறார்.

சோனியா, ராகுல் இருவரும் இணைந்து நடைபயணம் மேற்கொள்வதால் கர்நாடகாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த உள்ளனர். பிரியங்காவும் நடைபயணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News