இந்தியா

பா.ஜனதா அரசின் ஊழல் கொள்கையால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு: பிரியங்கா காந்தி

Published On 2023-05-05 07:52 IST   |   Update On 2023-05-05 07:52:00 IST
  • கர்நாடகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது.
  • இளைஞர்கள் கல்விக்காக அதிகளவில் செலவு செய்கிறார்கள்.

பெங்களூரு :

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கர்நாடகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கொப்பல் மாவட்டம் கனககிரியில் நேற்று நடைபெற்ற கட்சியின் பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர், அரிசி, பருப்புகள், மாவுகள் போன்றவற்றின் விலை உயர்ந்துவிட்டது. பா.ஜனதா ஊழல் அரசின் ஊழல் கொள்கைகளால் விலைவாசி உயர்ந்துள்ளது. 40 சதவீத கமிஷன் பா.ஜனதா அரசு என்று நாம் சொல்லவில்லை. இந்த பெயரை ஒப்பந்ததாரர்கள் சங்கமே வழங்கியுள்ளது.

அரசுக்கு பெரிய அளவில் கமிஷன் கொடுக்க முடியாத ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இங்குள்ள இளைஞர்கள் கல்விக்காக அதிகளவில் செலவு செய்கிறார்கள். கல்வி பயின்று போட்டி தேர்வுக்கு செலவு செய்து படிக்கிறார்கள். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலர் அந்த பணிக்காக லஞ்சம் வாங்கியுள்ளனர். இதனால் தேர்வான பட்டியலையே இந்த அரசு ரத்து செய்துவிட்டது. பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகன் வீட்டில் ரூ.8 கோடி சிக்கியது.

இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

முன்னதாக பிரியங்கா காந்தி, கனககிரி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கனகாசலபதி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டார்.

Tags:    

Similar News