இந்தியா

அமலாக்கத்துறை வழக்கில் சஞ்சய் ராவத் 1-ந்தேதி ஆஜராக புதிய சம்மன்

Update: 2022-06-29 01:58 GMT
  • அமலாக்கத்துறை பத்ரா குடிசை சீரமைப்பு திட்ட முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத்திற்கு சம்மன் அனுப்பியது.
  • சஞ்சய் ராவத் எம்.பி., அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராகவும் கடுமையாக பேசி வருகிறார்.

மும்பை:

சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். இதனால் சிவசேனா தலைமையிலான அரசு கவிழும் ஆபத்தை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரான சஞ்சய் ராவத் எம்.பி., அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராகவும் கடுமையாக பேசி வருகிறார்.

இந்தநிலையில் அமலாக்கத்துறை பத்ரா குடிசை சீரமைப்பு திட்ட முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத்திற்கு திடீரென நேற்று முன்தினம் சம்மன் அனுப்பியது. அதில் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேவேளையில் அவரது வக்கீல் மும்பை பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்றார்.

அப்போது, அலிபாக்கில் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்கனவே முடிவு செய்ததால் சஞ்சய் ராவத்தால் ஆஜராக முடியவில்லை என்றும், முக்கிய ஆவணங்களை சேகரித்து விசாரணைக்கு ஆஜராகும் வகையில் அவருக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் வக்கீல் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் சஞ்சய் ராவத்திற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்க அமலாக்கத்துறை மறுத்துவிட்டது. ஜூலை 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆஜராகும்படி அவருக்கு புதிய சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.

மும்பை கோரேகாவ் பகுதியில் பத்ரா குடிசை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட நிறுவனம் ரூ.1,039 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதில், ரூ.100 கோடியை பிரவின் ராவத் என்பவர் சஞ்சய் ராவத் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News