பீகார் தேர்தல்: நிதிஷ் குமார்தான் என்.டி.ஏ.-யின் முதலமைச்சர் வேட்பாளர்- மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
- தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
- நிதிஷ் குமார்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பாஜக மேலிடம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமார்தான், தொகுதி பங்கீடு விரைவில் முடிவடையும் என பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிரிராஜ் சிங் கூறியதாவது:-
நிதிஷ் குமார்தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) முதல்வர் வேட்பாளர். என்.டி.ஏ. கூட்டணியில் எல்லாம் நன்றாக உள்ளது. தொகுதி பங்கீடு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இறுதி வடிவம் விரைவில் முடிவாகும்.
மகாபத்பந்தன் என அழைக்கப்படும் இந்தியா கூட்டணி பிளவுப்பட்ட வீடு. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் இருப்பார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. காங்கிரஸ் அறிவிப்பால் ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ் கவலையும், பயமும் அடைந்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கை, தலைமை மற்றும் நோக்கம் அனைத்தும் உறுதியாக உள்ளன என்றும், எந்த வெறுப்பும் இல்லை என்றும் என்றால் உறுதியா சொல்ல முடியும்.
இவ்வாறு கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் நிதி்ஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பிரதான கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளுடன் சிராக் பஸ்வான் கட்சியும் முக்கியமான 3ஆவது பெரிய கட்சியாக உள்ளது. சிராக் பஸ்வான் கட்சிக்கு என்டிஏ 25 இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், சிராக் 40 இடங்கள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.