இந்தியா

எடியூரப்பாவை பசவராஜ் பொம்மை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த காட்சி

பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கு புதிய பதவி

Update: 2022-08-18 04:03 GMT
  • கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) தேர்தல் நடக்கிறது.
  • எடியூரப்பா இல்லாமல் சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜனதா மேலிடம் விரும்பவில்லை.
  • முக்கிய முடிவுகளை எடுக்கும் கட்சியின் உயர்நிலை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு :

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளன. முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா வயது மூப்பு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பதவி விலகினார். தற்போது அவருக்கு 80 வயதாகிறது. அவர் பதவி விலகி ஓராண்டு ஆகிவிட்டது. முதல்-மந்திரி பதவியை விட்டு அழுது கொண்டே விலகிய எடியூரப்பா, கடந்த ஓராண்டாக தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே இருக்கிறார். அவர் விலகிய பிறகு கடந்த ஓராண்டில் பா.ஜனதாவின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிட்காயின் முறைகேடு, 40 சதவீத கமிஷன் புகார், சப்-இன்ஸ்பெக்டர் நியமன முறைகேடு, கல்லூரி ஆசிரியர் நியமன முறைகேடு என பல்வேறு முறைகேடு புகார்கள் பசவராஜ் பொம்மை அரசு மீது எழுந்துள்ளன. இந்த ஊழல்-முறைகேடு புகார்களை முன்வைத்து பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி பா.ஜனதா அரசுக்கு போராட்டங்கள் மூலம் கடுமையான நெருக்கடி கொடுத்து வருகிறது.

மேலும் கடந்த ஓராண்டில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல், மேல்-சபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் பா.ஜனதாவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்திலேயே பா.ஜனதா தோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சூழ்நிலையில் பா.ஜனதா மேலிடம், தனியார் நிறுவனம் மூலம் மக்களின் மனநிலையை அறிய ஆய்வு நடத்தியது. அதில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து மக்களின் கருத்து அறியப்பட்டது. இதில் பா.ஜனதா 70 முதல் 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று தெரியவந்தது.

எடியூரப்பாவை முழுவதுமாக ஓரங்கட்டிவிட்டு சட்டசபை தேர்தலை சந்தித்தால் பா.ஜனதா வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை ஆழ்ந்து ஆலோசித்து பார்த்த கட்சி மேலிட தலைவர்கள், எடியூரப்பாவை தீவிர அரசியலில் களம் இறக்க முடிவு செய்தனர். அதன்படி பா.ஜனதாவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் கட்சியின் உயர்நிலை குழு உறுப்பினராக எடியூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பா.ஜனதா தேசிய தேர்தல் குழு உறுப்பினர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

பா.ஜனதாவை பொறுத்தவரையில் அரசியலில் இருந்து விலகிய தலைவருக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்தது இல்லை. அத்வானி, முரளிமனோகர்ஜோஷி போன்ற பெரும் தலைவர்களையே வயதை காரணம் காட்டி ஓரங்கட்டி விட்டனர். அவர்களுக்கு மீண்டும் கட்சியில் எந்த பதவியும் வழங்கப்படவில்லை. ஆனால் எடியூரப்பாவின் மக்கள் செல்வாக்கு மற்றும் அவர் லிங்காயத் சமூகத்தின் தலைவராக பார்க்கப்படுவது போன்றவற்றால் எடியூரப்பா இல்லாமல் சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜனதா மேலிடம் விரும்பவில்லை.

அதனால் எடியூரப்பாவுக்கு உயர்நிலை குழுவிலும், பா.ஜனதா தேசிய தேர்தல் குழுவிலும் இடம் வழங்கி அதன் மூலம் அவரை தீவிர அரசியலில் ஈடுபடுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. இந்த பதவிகள் வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் எடியூரப்பா உற்சாகமாக கட்சி பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயது வரம்பால் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டு இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எடியூரப்பாவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், 'பா.ஜனதாவின் உயர்நிலை குழு உறுப்பினராகவும், தேசிய தேர்தல் குழு உறுப்பினராகவும் எடியூரப்பா நியமிக்கப்பட்டு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியின் உச்சபட்ச அமைப்புக்கு நியமிக்கப்பட்டு இருப்பதன் மூலம் அவருக்கு கட்சி மேலிடம் உரிய மரியாதை வழங்கியுள்ளது. அவருக்கு இந்த பதவிகள் வழங்கி இருப்பதால் கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு யானை பலம் கிடைத்துள்ளது. வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. எடியூரப்பாவுக்கு பதவிகள் வழங்கியதற்காக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் மந்திரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Similar News