இந்தியா

கர்நாடகத்தில் டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்பு: குமாரசாமி ஆரூடம்

Update: 2022-07-02 02:23 GMT
  • ஆர்.ஆர்.நகரில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.
  • தற்போது பெங்களூருவை கொள்ளையடிக்கும் முயற்சியில் தேசிய கட்சிகள் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க தேசிய கட்சிகளை போன்று ஜனதாதளம் (எஸ்) கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஜனதா ஜலதாரே யாத்திரை தொடங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஜனதாதளம் (எஸ்) கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். தற்போது பெங்களூரு மாநகராட்சி தேர்தலை கருத்தில் கொண்டும், சட்டசபை தேர்தலுக்காகவும் பெங்களூருவில் கட்சியை வளர்க்கும் விதமாக ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் ஜனதா மித்ரா யாத்திரை நேற்று தொடங்கப்பட்டது. பெங்களூரு ஜே.பி.பவனில் நடந்த நிகழ்ச்சியில் குமாரசாமி பேசியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் பெங்களூருவில் 15 தொகுதிகளில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சட்டசபை மற்றும் பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாக கட்சியை வளர்க்கும் நோக்கத்துடன் தற்போது ஜனதா மித்ரா யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஜனதாதளம் (எஸ்) கட்சியும் வளர்ந்து வருகிறது.

ஆர்.ஆர்.நகரில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. இதனை நமது கட்சி தொண்டர்கள் மறந்து விடக்கூடாது. நமது கட்சி ஆட்சியில் இருந்த போது மக்கள் பணத்தை கொள்ளையடித்தது இல்லை. கடவுளின் ஆசிர்வாதத்தால் 2 முறை முதல்-மந்திரியாக இருந்த போது மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினேன். தற்போது பெங்களூருவை கொள்ளையடிக்கும் முயற்சியில் தேசிய கட்சிகள் ஈடுபட்டுள்ளனர். இதனை முழுமையாக முறியடிக்க வேண்டியது நமது கட்சியின் நோக்கம், குறிக்கோள் ஆகும்.

நமது கட்சி தொண்டர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, தேசிய கட்சிகளின் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஜனதா மித்ரா நிறைவு விழாவின் போது பெங்களூருவில் வருகிற 17-ந் தேதி பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பிரமாண்ட மாநாடு நடத்தப்படும். கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறலாம். வருகிற டிசம்பர் மாதம் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும், அதனை சந்திக்க ஜனதாதளம் (எஸ்) கட்சி தயாராக உள்ளது.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Tags:    

Similar News