இந்தியா

கர்நாடகத்தில் 1 கோடி வீடுகளில் தேசிய கொடி ஏற்ற இலக்கு: பசவராஜ் பொம்மை

Published On 2022-08-09 04:09 GMT   |   Update On 2022-08-09 04:09 GMT
  • வருகிற 13-ந் தேதி முதலே தேசிய கொடி ஏற்றுவதை தொடங்க வேண்டும்.
  • வீடுகளில் 13-ந் தேதி கொடி ஏற்றினால் அதை 15-ந் தேதி வரை பறக்க அனுமதிக்கலாம்.

பெங்களூரு :

'ஹர் கர் திரங்கா' தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தனது வீட்டில் இருந்தபடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

ஹர் கர் திரங்கா இயக்கத்தின்படி வீடுகளில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியை தேசபக்தி உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும். இதை அர்த்தப்பூர்வமாக நடத்த வேண்டும். கர்நாடகத்தில் 1 கோடி வீடுகள் மீது தேசிய கொடி ஏற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தேசிய கொடி விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருகிற 13-ந் தேதி முதலே தேசிய கொடி ஏற்றுவதை தொடங்க வேண்டும். இதன் மூலம் சுதந்திர தின பவள விழாவை விமரிசையாக கொண்டாட வேண்டும். அரசு கட்டிடங்களில் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 3 நாட்களும் காலையில் தேசிய கொடியை ஏற்றி மாலையில் இறக்க வேண்டும். வீடுகளில் 13-ந் தேதி கொடி ஏற்றினால் அதை 15-ந் தேதி வரை பறக்க அனுமதிக்கலாம்.

தலைமை செயலாளர் மீண்டும் ஒருமுறை காணொலி மூலம் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி உாிய உத்தரவை பிறப்பிப்பார். வெள்ளையனே வெளியேறு (க்விட் இந்தியா) போராட்டத்தின் நினைவாக வருகிற 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சந்தித்து அதிகாரிகள் கவுரவிக்க வேண்டும். மாவட்டங்களின் பொறுப்பு மந்திரிகளும் அதில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

Similar News