இந்தியா

கலப்பட உணவால் ஆண்டுக்கு 4 லட்சம் பேர் உயிரிழப்பு- 60 கோடி பேருக்கு நோய் பாதிப்பு

Published On 2024-09-21 09:50 IST   |   Update On 2024-09-21 09:50:00 IST
  • டெல்லியில், 2-வது சர்வதேச உணவு தர நிர்ணய அமைப்புகள் மாநாடு நடந்தது.
  • பாதுகாப்பான உணவு, எளிதாக அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய கூட்டு முயற்சி அவசியம்.

புதுடெல்லி:

டெல்லியில், 2-வது சர்வதேச உணவு தர நிர்ணய அமைப்புகள் மாநாடு நடந்தது. அதில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனம் ஜிப்ரேயிசஸ் வெளியிட்ட வீடியோ செய்தி ஒளிபரப்பப்பட்டது.

வீடியோவில், டெட்ராஸ் அதனம் ஜிப்ரேயிசஸ் கூறியிருப்பதாவது:-

பருவநிலை மாற்றம், மக்கள்தொகை வளர்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள், உலகமயமாக்கல், தொழில்மயமாக்கல் ஆகியவற்றால், நமது உணவு முறைகள் சவால்களை சந்தித்து வருகின்றன.

கலப்பட உணவுகளால், உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 கோடி பேர் நோய்வாய்ப்படுகின்றனர். ஆண்டுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 70 சதவீதம்பேர், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர்.

எனவே, பாதுகாப்பற்ற உணவை தடுக்க வேண்டிய முக்கிய பங்கு உணவு தர நிர்ணய அமைப்புகளுக்கு இருக்கிறது. 30 லட்சம் பேருக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைக்கவில்லை. எனவே, ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பான உணவு, எளிதாக அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய கூட்டு முயற்சி அவசியம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இம்மாநாட்டில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, உணவுத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, சுகாதார செயலாளர் அபூர்வா சந்திரா, உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி கமலா வர்த்தன ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News