இந்தியா
கோப்புப்படம்

திருப்பதியில் 9 அபிஷேக தரிசன டிக்கெட்டிற்கு ரூ.4.50 லட்சம் பறித்த வாலிபர்

Update: 2022-05-24 06:15 GMT
திருப்பதியில் 9 அபிஷேக தரிசன டிக்கெட்டிற்கு ரூ.4.50 லட்சம் பறித்த வாலிபர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிர்யாளகுடாவை சேர்ந்த 3 குடும்பத்தினர் திருப்பதியில் தரிசனம் செய்ய முடிவு செய்தனர். ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு விட்டதால் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்தனர்.

அப்போது சித்தூரை சேர்ந்த சரவணன் என்பவரின் செல்போனை கொடுத்தனர். செல்போனில் தொடர்பு கொண்டு தரிசன டிக்கெட் கிடைக்குமா என விசாரித்தனர். எதிர்முனையில் பேசியவர் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் கிடைக்காது. வேண்டுமென்றால் அபிஷேக தரிசன டிக்கெட்கள் வாங்கித் தருவதாக தெரிவித்தார். அவர்கள் 9 அபிஷேக தரிசன டிக்கெட்டுகள் வேண்டும் என தெரிவித்தனர்.

அபிஷேக தரிசன டிக்கெட்டுகள் ரூ.3 ஆயிரத்திற்கு தேவஸ்தானத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் சரவணன் 1 அபிஷேக தரிசன டிக்கெட் ரூ.50 ஆயிரம் வீதம் 9 டிக்கெட்டுகளுக்கு ரூ.4.50 லட்சம் தரவேண்டும் என கூறினார். பணத்தை கூகுள் பேவில் அனுப்பிவிட்டு திருப்பதிக்கு வந்து நேரடியாக தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்

இதையடுத்து கூகுள் பே மூலம் ரூ.4.50 லட்சத்தை அனுப்பினர்.

இதையடுத்து 3 குடும்பத்தாரும் திருப்பதியில் தரிசனம் செய்வதற்கு நேற்று முன்தினம் வந்தனர். சரவணன் கொடுத்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

2 நாட்களாக காத்திருந்ததால் விரக்தி அடைந்த அவர்கள் இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானத்தில் புகார் செய்தனர். தேவஸ்தான அதிகாரிகள் திருமலை போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிஷேக தரிசன டிக்கெட் வாங்கி தருவதாக ஏமாற்றியவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News