இந்தியா
திருப்பதி கோவில்

2 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டம் அலைமோதல்- திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரமாகிறது

Update: 2022-05-22 11:03 GMT
மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாள் என்பதால் நேற்று முன்தினம் திருப்பதியில் 71,119 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திருப்பதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தது.

தொற்று பரவல் குறைந்ததைடுத்து ரூ.300 ஆன்லைன் தரிசனம் மற்றும் இலவச தரிசனத்தில் படிப்படியாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாள் என்பதால் நேற்று முன்தினம் 71,119 பேர் தரிசனம் செய்தனர். ரூ.3.91 கோடி உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் இலவச தரிசனம் செய்வதற்கான பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இலவச தரிசனத்தில் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் 33 அறைகளும் நிரம்பி வழிந்தது. நீண்ட தூரத்திற்கு பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் நாராயணகிரி பார்க், ராம் பகிட்ஷா, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக காத்திருக்கின்றனர். வரிசையில் நிற்கும் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 83 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 83,739 பேர் தரிசனம் செய்தனர். 46,187 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.20 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

Tags:    

Similar News