இந்தியா
கோப்பு படம்

கர்நாடகாவில் அரசு துறை அவுட்சோர்சிங் பணிகளில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு

Published On 2022-05-21 17:04 GMT   |   Update On 2022-05-21 17:04 GMT
தன்னாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு இந்த வழிகாட்டுதல் பொருந்தும் என்று கர்நாடகா அரசின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு அதன் அனைத்து துறைகள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள், நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அவுட்சோர்சிங் ஊழியர்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் பி ரவிக்குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், ஹவுஸ் கீப்பிங், டிரைவர்கள் மற்றும் குரூப் டி பணியாளர்களுக்கு அவுட்சோர்சிங் மூலம் ஆட்சேர்ப்பு செய்வது மாநில அரசின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் அதிகாரம் சமூக நீதி மற்றும் சமமான வேலை வாய்ப்புகளுக்காக அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத வேலைகளை அரசுஒதுக்கியுள்ளது.

அவுட்சோர்சிங் ஊழியர்களாக பெண்கள் தங்கள் கடமைகளை திறம்பட செய்கிறார்கள். அதன் அடிப்படையில் இந்த சேவைகளுக்கு 33 சதவீத வேலைகளை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் அவுட்சோர்சிங் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட நிறுவனங்கள் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற விதியை இடம் பெறச் செய்ய வேண்டும்.

அரசின் ஒரு பகுதியாக இருக்கும் தன்னாட்சிஅமைப்புகள், பல்கலைக் கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு இந்த வழிகாட்டுதல் பொருந்தும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து அரசுத்துறை செயலாளர்களும் இந்த உத்தரவை தங்கள் துறையின் கீழ் உள்ள அனைத்து அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் 
பி ரவிக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News