இந்தியா
ஆன்லைன் விளையாட்டு

ஆன்லைன் விளையாட்டில் பல லட்சம் இழந்த என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

Published On 2022-05-21 06:50 GMT   |   Update On 2022-05-21 06:50 GMT
ஆந்திராவில் ஆன்லைன் விளையாட்டில் பல லட்சம் இழந்த மாணவர் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம், சின்ன மாஞ்சியம் பகுதியை சேர்ந்தவர் திலீப் ரெட்டி. (வயது 20). இவர் பலமனேரில் அறை எடுத்து தங்கி அங்குள்ள உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

திலீப் ரெட்டி தனது செல்போனில் ஆன்லைனில் பணம் வைத்து விளையாடி வந்தார். இந்த விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டுக்காக உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் பணம் வாங்கியுள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த செயின் மோதிரம் அனைத்தையும் இழந்தார்.

திலீப் ரெட்டியிடம் பணத்தை கொடுத்தவர்கள் அதை திருப்பி தருமாறு வற்புறுத்தி வந்தனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த திலீப்ரெட்டி நேற்று கல்லூரி முடிந்து அறைக்கு வந்தார். அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அறைக்குச் சென்றவர் நீண்ட நேரமாக அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த சக நண்பர்கள் ஜன்னல் வழியாக பார்த்தனர்.

அப்போது திலீப்ரெட்டி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பலமனேர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News