இந்தியா
குமாரசாமி

பள்ளி பாடப்புத்தகத்தில் பகத்சிங் குறித்த பாடத்தை நீக்கியதற்கு குமாரசாமி கண்டனம்

Published On 2022-05-18 03:25 GMT   |   Update On 2022-05-18 03:25 GMT
ஆங்கிலேயர்களின் வழியை பா.ஜனதாவினர் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும் பின்பற்றுகிறார்கள் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் மிகப்பெரிய தேசபக்தர், ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பகத்சிங்கின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து இந்த அரசு நீக்கியுள்ளது. இதை கண்டிக்கிறேன். அதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெடகேவார் குறித்த வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களை கட்சி புத்தகங்களாக மாற்ற நடைபெறும் சதியை கண்டிக்கிறேன்.

ஆபரேஷன் தாமரை மூலம் கர்நாடகத்தில் முறைகேடான வழியில் ஆட்சிக்கு வந்து தங்களை தேசப்பக்தர்கள் என்று கூறிக்கொள்பவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?. இது இந்த அரசின் மிக மோசமான செயல்பாடு ஆகும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி பகத்சிங் தூக்கில் ஏறினார். பகத்சிங் போன்ற இத்தகைய தேசபக்தர்களை பா.ஜனதா ஏற்றுக்கொள்ளுமா?.

ஹிஜாப், ஹலால் உணவு, முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராக செயல்பட்டனர். இப்போது உண்மையான தேசபக்தர்களின் வரலாறுகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா மற்றும் ஆங்கிலேயர்கள் இருவரும் ஒன்றே. பிரித்து ஆளுவதே இந்த இருவரின் கொள்கை. ஆங்கிலேயர்களின் வழியை பா.ஜனதாவினர் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும் பின்பற்றுகிறார்கள். மக்களின் சுதந்திரத்தை பா.ஜனதாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News