இந்தியா
உள்துறை மந்திரி அமித்ஷா

அசாமுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் - முதல் மந்திரியிடம் உறுதியளித்த உள்துறை மந்திரி

Published On 2022-05-17 15:17 GMT   |   Update On 2022-05-17 15:17 GMT
அசாமில் பெய்து வரும் கனமழைக்கு கச்சார் மாவட்டத்தில் வெள்ளத்தில் 2 பேரும், திமா ஹசாவோவில் நிலச்சரிவால் 3 பேரும் பலியாகினர்.
கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் 20 மாவட்டங்களில் பெய்த கனமழையால் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். 46 வருவாய் வட்டத்தில் உள்ள 652 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஹோஜய், கச்சார் மாவட்டங்களில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதிகபட்சமாக ஹோஜய்யில் 78,157 பேரும், கச்சாரில் 51,357 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பல இடங்களில் சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன. திமாஹசாவோ மாவட்டத்தில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு ரெயில் பாதைகள் சகதி, பாறைகளுக்கு அடியில் புதைந்தன. இதனால் அந்த மாவட்டம் இதர பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது. அந்த மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டது.
 
7 மாவட்டங்களில் 55 முகாம்கள் அமைக்கப்பட்டு 32,959 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கச்சார் மாவட்டத்தில் வெள்ளத்தால் 2 பேரும், திமா ஹசாவோவில் நிலச்சரிவால் 3 பேரும் பலியானார்கள்.

இந்நிலையில், முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார். அப்போது கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார். மேலும், பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட அசாமுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags:    

Similar News