இந்தியா
திருப்பதி பாபவிநாசம் சாலையில் யானைக்கூட்டம் இடித்து தள்ளிய தடுப்பு வேலி

திருப்பதி பாபவிநாசம் பகுதியில் தடுப்பு வேலியை இடித்து தள்ளி யானைகள் அட்டகாசம்

Published On 2022-05-16 09:58 GMT   |   Update On 2022-05-16 09:58 GMT
திருப்பதி பாபவிநாசம் சாலையில் யானை கூட்டத்தை கண்ட பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பிளிறியபடி வந்த யானைகள் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியை தும்பிக்கையால் முட்டித் தள்ளியது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். தரிசனம் முடிந்த பிறகு அங்குள்ள பாபவிநாசம் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கும், கார் வேட்டி மண்டபம், சிலோ தோரணம், ஜப்பாலா உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் சென்று வருகின்றனர்.

பாபவிநாசம் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் மான், சிறுத்தை, யானை, பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. வனப்பகுதியில் இருக்கும் வன விலங்குகள் அடிக்கடி பக்தர்கள் செல்லும் சாலைக்கு வருவதால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் நடந்தும் வாகனங்கள் மூலமும் பாபவிநாசத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். மதியம் 5க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக பாபவிநாசம் சாலைக்கு வந்தது. யானை கூட்டத்தை கண்ட பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

பிளிறியபடி வந்த யானைகள் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியை தும்பிக்கையால் முட்டித் தள்ளியது. பக்தர்கள் இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தேவஸ்தான பாதுகாவலர்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானை கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்டினர். இதனால் பக்தர்கள் நிம்மதி அடைந்து வழக்கம்போல் பாபவிநாசம் சென்று வந்தனர்.

Tags:    

Similar News