இந்தியா
சித்தராமையா

மக்களை திசை திருப்பவே மதமாற்றத்துக்கு எதிராக அவசர சட்டம்: சித்தராமையா

Update: 2022-05-14 03:35 GMT
பா.ஜனதா அரசு அமைந்ததில் இருந்து மாநிலத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. எந்த துறைகளிலும் ஊழல் மட்டும் தான் நடக்கிறது என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு :

பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மதமாற்றம் செய்வதற்கு எதிராக ஏற்கனவே சட்டங்கள் உள்ளது. தற்போது சிறுபான்மையினத்தவரை மிரட்டுவதற்காகவும், அவர்களுக்கு தொல்லை கொடுப்பதற்காகவும் மதமாற்றத்துக்கு எதிராக அவசர சட்டத்தை அரசு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. பா.ஜனதா ஆட்சியில் தான் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள், அவர்களது தார்மீக உரிமைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது நடந்து வருகிறது.

இதற்கு இந்த நாடே சாட்சியாக இருக்கிறது. கர்நாடகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடந்த தாக்குதல், மாநிலத்திற்கே பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியது. தற்போது அவசர கதியில் சிறுபான்மையினருக்கு எதிராக பா.ஜனதா அரசு எடுத்திருக்கும் மிகப்பெரிய ஆயுதம் தான் மதமாற்ற அவசர சட்டமாகும்.

இந்த மதமாற்ற அவசர சட்டத்திற்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்க கூடாது. இந்த அவசர சட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. சிறுபான்மையினரை மிரட்ட வேண்டும், அவர்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும், இதன்மூலம் அரசியல் செய்ய வேண்டும் என்பதே பா.ஜனதா அரசின் நோக்கமாகும். சுயமாக ஒருவர் வேறு மதத்தை நாடி செல்லலாம் என்று அரசியலமைப்பு சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது. அதற்கு பிறகும் புதிதாக மதமாற்றத்துக்கு அவசர சட்டம் தேவை?.

பா.ஜனதா அரசு அமைந்ததில் இருந்து மாநிலத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. எந்த துறைகளிலும் ஊழல் மட்டும் தான் நடக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு, பிற தேர்வு முறைகேடுகள் நடக்கிறது. இவற்றையெல்லாம் மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். மக்களை திசை திருப்ப வேண்டும், தங்களது அரசின் ஊழல், பிற முறைகேடுகளை மூடி மறைக்க வேண்டும் என்பதற்காக மதமாற்றத்துக்கு அவசர சட்டத்தை அரசு கொண்டு வருகிறது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News