இந்தியா
கோப்புப்படம்

தாலி கட்டும் நேரத்தில் மணமேடையில் மயங்கி விழுந்து மணப்பெண் பலியான சோகம்

Published On 2022-05-13 05:39 GMT   |   Update On 2022-05-13 05:39 GMT
மணமேடையில் மணமகள் மயங்கி விழுந்து இறந்ததால் விழாக்கோலம் பூண்டிருந்த திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது.
திருப்பதி:

ஐதராபாத்தை சேர்ந்தவர் ஈஸ்வர ராவ். இவரது மனைவி அனுராதா. இவர்களது மகள் சுஜானா (வயது22). விசாகப்பட்டினம் மாவட்டம், பி.எம்.பாளையத்தை சேர்ந்தவர் சிவாஜி (25). சுஜானா, சிவாஜிக்கு அவர்களது பெற்றோர் திருமணம் செய்ய நிச்சயம் செய்திருந்தனர். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

மங்கள வாத்தியங்கள் இசைக்க மணமக்கள் குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதையடுத்து பாட்டுக் கச்சேரியுடன் ஆட்டம் பாட்டம் என மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி களை கட்டியது. நிகழ்ச்சியில் ஏராளமான உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இரவு 10 மணிக்கு முகூர்த்த நேரம் நிச்சயிக்கப்பட்டு இருந்ததால் மணமக்கள் பட்டு உடைகள் அணிந்து மணமேடையில் உட்கார வைக்கப்பட்டனர். புரோகிதர் யாகம் வளர்த்து மந்திரங்கள் ஓதி கொண்டு இருந்தார்.

மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டுவதற்கு முன்பாக சீரகம் கலந்த வெல்லத்தை மணமகன் மணமகளின் தலையில் வைப்பது ஐதீகம்.

அதன்படி சீரகம் கலந்த வெல்லத்தை மணமகள் சுஜானா தலையில் மணமகன் வைத்தார். அப்போது மணமகள் திடீரென மணமேடையில் மயங்கி சரிந்து விழுந்தார்.

இதனைக்கண்ட மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மணமகளை மீட்டு அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு மணமகளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மணக்கோலத்தில் இருந்த பெண்ணை பிண கோலத்தில் பார்த்ததால் அவரது பெற்றோர் மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவலறிந்த விசாகப்பட்டினம் உதவி போலீஸ் கமிஷனர் சீனிவாசராவ் மற்றும் பி.எம் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணமகள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சுஜானாவின் அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மணமகளின் பையில் விஷத்தன்மை கொண்ட காய்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஜானா திருமணத்தில் விருப்பம் இல்லாததால் தற்கொலை செய்தாரா? அல்லது காதல் தோல்வியால் தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர் தற்கொலை செய்தாரா? அல்லது இயற்கை மரணமா என தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மணமேடையில் மணமகள் மயங்கி விழுந்து இறந்ததால் விழாக்கோலம் பூண்டிருந்த திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது.


Tags:    

Similar News