இந்தியா
குமாரசாமி

கல்லூரி உதவி பேராசிரியர் நியமன முறைகேட்டில் ரூ.450 கோடி கைமாறியது: குமாரசாமி

Published On 2022-05-12 03:06 GMT   |   Update On 2022-05-12 03:06 GMT
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது ஊழல் செய்ததாக மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார். அவரிடம் அதற்கு ஆதாரங்கள் இருந்தால் வெளியிட வேண்டும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு:

ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ஜலதாரே பொதுக்கூட்டம் பெங்களூரு பசவனகுடியில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

மதங்களை வீட்டில் வைத்து கொள்ளலாம். வீதியில் ரத்தம் சிந்துவது வேண்டாம். நான் 2 முறை முதல்-மந்திரி பதவியை வகித்து விட்டேன். அதனால் மீண்டும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்பது எனக்கு முக்கியம் அல்ல. மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமே தவிர சமூகத்தை உடைக்க கூடாது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது ஊழல் செய்ததாக மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார். அவரிடம் அதற்கு ஆதாரங்கள் இருந்தால் வெளியிட வேண்டும்.

நான் கொள்ளையடிக்கவில்லை. அவர் தான் கொள்ளை அடித்து கொண்டிருக்கிறார். உதவி பேராசிரியர் நியமன முறைகேட்டில் ரூ.450 கோடி கைமாறியுள்ளது. என்னை பற்றி பேசும்போது அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. அத்தகைய ஆதாரங்கள் அவரிடம் இல்லை. பேசுவதற்கு முன்பு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஐ.பி.எஸ். அதிகாரி ரவீந்திரநாத்தின் ராஜினாமா கடிதத்தை அரசு அங்கீகரிக்க கூடாது. அரசின் செயலை கண்டித்து அவர் ராஜினாமா செய்துள்ளார். பலர் போலி சாதி சான்றிதழ் பெற்று அரசின் பலனை பெற்றுள்ளனர். அவர்களுக்கு எதிராக அவர் விசாரணை நடத்தியுள்ளார். இந்த சூழ்நிலையில் அவரை அரசு பணி இடமாற்றம் செய்துள்ளது. இந்த ஆட்சியில் தலித் மக்களுக்கும், தலித் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு உள்ளதா?.

சித்தராமையா ஆட்சியில் போலி சான்றிதழ் பெற்று போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய கெம்பய்யா, போலீஸ் துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதனால் போலி சான்றிதழ் விவகாரம் குறித்து பேச சித்தராமையாவுக்கு தகுதி இல்லை. கெம்பய்யாவைக்கு நோட்டீசு வழங்கிய அதிகாரி இரண்டே நாட்களில் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
 
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News