இந்தியா
பசவராஜ் பொம்மை

பொதுமக்களின் குறைகளை தீர்க்க தனியாக அலுவலகம் திறக்க வேண்டும்: பசவராஜ் பொம்மை

Update: 2022-05-09 04:32 GMT
பொதுமக்களின் குறைகளை தீர்க்க மாவட்டம்தோறும் தனியாக அலுவலகம் திறக்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில்  நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல், தலைமை செயலாளர் ரவிக்குமார், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
 
கர்நாடகத்தில் ஏழை மக்களின் நலனுக்காக நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் உங்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கும். கஷ்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும். அதனால் உங்களுக்கும் திருப்தி கிடைக்கும். மேலும் மக்கள் ஆட்சி நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உணர்வார்கள். நாம் ஒரு குழுவாக ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.

புதிய கர்நாடகத்தை உருவாக்க வேண்டும் என்று நான் முயற்சி செய்து வருகிறேன். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு தேவை. மாநிலத்தின் வளர்ச்சியில் மாவட்ட நிர்வாகங்களின் செயல்பாடுகள் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. மாவட்ட கலெக்டர் ஆவது ஒரு சிறப்பு. மாவட்டங்களில் நீங்கள் நேரடியாக பொறுப்புகளை ஏற்று செயல்படுகிறீர்கள். பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

தற்போது காலம் மாறிவிட்டது. மக்கள் விழிப்புடன் உள்ளனர். உங்களின் பணிகளை கேள்வி கேட்கிறார்கள். ஆர்வமாக ஈடுபாட்டு உணர்வுடன் பணியாற்றினால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். நிவாரண உதவிகள் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். தவறுகளை சகித்துக்கொள்ள முடியாது. மேலும் நிவாரணம் வழங்குவதில் காலதாமதம் செய்யக்கூடாது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை குறித்த காலக்கெடுவுக்குள் செயல்படுத்த வேண்டும். கிராமங்களை நோக்கி கலெக்டர்கள் திட்டத்தில் கலெக்டர்கள் கிராமங்களுக்கு செல்லும்போது, உதவி கலெக்டர்கள் மற்றும் தாசில்தார்கள் உடன் இருக்க வேண்டும். அங்கு ஏழை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்களின் குறைகளை தீர்க்க தனியாக ஒரு அலுவலகம் திறக்க வேண்டும். ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக அமல்படுத்தப்படும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு வரும் கோப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை மக்களுக்கு ஆதரவான பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏதாவது காரணத்தை கூறி வரும் மனுக்களை எல்லாம் நிராகரித்தால் நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் இல்லை. சிறிது தொந்தரவு வந்தாலும் பரவாயில்லை என்று கருதி ஏழைகளுக்கு உதவ வேண்டும்.

நல்ல மழை பெய்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. சில இடங்களில் குடிநீர் பிரச்சினை இருந்தால் அதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மயானத்திற்கு நிலம் ஒதுக்கி கொடுக்க வேண்டும்.

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கிராம ஒன் திட்டம் சரியான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும். அங்கு மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும்.

கோசாலைகள் அமைக்க அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 10 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண வேண்டும். 7 ஆயிரம் பள்ளி வகுப்பறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 4 ஆயிரம் அங்கன்வாடி மையங்களை அமைக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
Tags:    

Similar News