இந்தியா
டிகே சிவக்குமார்

டி.கே.சிவக்குமார் பயங்கர ஊழல்வாதி: பாஜக கடும் விமர்சனம்

Published On 2022-05-07 03:17 GMT   |   Update On 2022-05-07 03:17 GMT
டெல்லியில் உள்ள அடுக்குமாடி வீட்டை சட்டவிரோத பண பரிமாற்ற கிடங்காக மாற்றியதை கர்நாடக மக்கள் மறக்கவில்லை. டி.கே.சிவக்குமார் ஒரு பயங்கர ஊழல்வாதி என பாஜக விமர்சனம் செய்துள்ளது.
பெங்களூரு:

கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேர்மையாக பணம் சம்பாதித்து இருந்தால் சிறைக்கு சென்றது ஏன்?. அவரின் ஊழல் பணத்தால் தான் காங்கிரஸ் நடத்தப்படுகிறது. அவர் கர்நாடகம் கண்ட பயங்கர ஊழல்வாதி என்பதில் ஆச்சரியமில்லை. அவர் மந்திரியாக இருந்தபோது அதிகளவில் ஊழல் செய்துள்ளார். அவர் பா.ஜனதா அரசு மீது ஆதாரங்கள் இன்றி ஊழல் குற்றச்சாட்டை கூறுகிறார் என்பது வேடிக்கையாக உள்ளது.

சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் டி.கே.சிவக்குமாரின் ரூ.800 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பினாமி சொத்துகள் கண்டறியப்பட்டன. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வளவு சொத்துகள் எங்கிருந்து வந்தது. கனகபுராவில் காய்கறி விற்றவர் இவ்வளவு பணத்தை எப்படி சம்பாதிக்க முடியும்.

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது, அவரது மகள் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டது பொய்யா?. அவர் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தபோது சூரியமின் உற்பத்தி திட்டத்தில் முறைகேடு நடந்தது. ஊழல் புகார் இருந்த காரணத்தால் தான் சித்தராமையா மந்திரிசபையில் அவருக்கு தாமதமாக இடம் வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள அடுக்குமாடி வீட்டை சட்டவிரோத பண பரிமாற்ற கிடங்காக மாற்றியதை கர்நாடக மக்கள் மறக்கவில்லை. டி.கே.சிவக்குமார் ஒரு பயங்கர ஊழல்வாதி.

இவ்வாறு பா.ஜனதா குறிப்பிட்டுள்ளது.
Tags:    

Similar News