இந்தியா
பசவராஜ் பொம்மை

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் எப்போது?: பசவராஜ் பொம்மை பதில்

Update: 2022-04-19 03:10 GMT
கர்நாடக பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பெங்களூரு:

கர்நாடக மந்திரிசபையில் 5 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் 4 இடங்கள் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளன. மந்திரி பதவியை எதிர்நோக்கி பா.ஜனதா மூத்த எம்.எல்.ஏ.க்கள் காத்திருக்கிறார்கள். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால் இதுகுறித்து பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்காமல் உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் மட்டுமே உள்ளன.

கர்நாடக பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதும் மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மந்திரி பதவி கிடைக்கும் என்று கனவில் இருந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உப்பள்ளி கலவரத்திற்கு காரணமான அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எங்கள் கட்சியின் தேசிய தலைவா் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்தினேன்.

அவர், டெல்லியில் இதுபற்றி ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துவதாகவும், அதன்பிறகு அழைப்பு விடுத்த பிறகு என்னை டெல்லி வரும்படியும் கூறியுள்ளார். மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுகிறதா? அல்லது மாற்றி அமைக்கப்படுகிறதா? என்பது டெல்லியில் தான் தெரியவரும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Tags:    

Similar News