இந்தியா
பசவராஜ் பொம்மை

ஈசுவரப்பா ராஜினாமா செய்தது அரசுக்கு பின்னடைவாக கருத முடியாது: பசவராஜ் பொம்மை

Update: 2022-04-16 01:57 GMT
மந்திரி பதவியை ஈசுவரப்பா ராஜினாமா செய்தது அரசுக்கு பின்னடைவாக கருத முடியாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காண்டிராக்டா் சந்தோஷ் பட்டீல் தற்கொலையில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஈசுவரப்பா தனது மந்திரி பதவியை இன்று(நேற்று) மாலை ராஜினாமா செய்கிறார். இதை கர்நாடக அரசுக்கு பின்னடைவாக கருத முடியாது. விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும். விசாரணை நிறைவடையும் முன்னரே காங்கிரசார், விசாரணை அதிகாரிகளாக, நீதிபதிகளாக மாறி கருத்துகளை கூறக்கூடாது.

ஈசுவரப்பா தாமாக முன்வந்து ராஜினாமா செய்கிறார். இந்த விவகாரத்தில் தான் 100 சதவீதம் அப்பாவி என்று அவர் கூறியுள்ளார். மேலும் விசாரணையை துரிதமாக நடத்துமாறும் அவர் கேட்டு கொண்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து வெளியே வருவதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்துகிறார்கள். இதில் இருந்து உண்மை வெளிவரும்.

முதலில் விசாரணை நடைபெற வேண்டும். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை செய்து கொண்டார். அவர் அப்போது போலீஸ் மந்திரியாக இருந்த கே.ஜே.ஜார்ஜ் பெயரை குறிப்பிட்டார். இதையடுத்து அவர் ராஜினாமா செய்தார். ஆனால் அவரை போலீசார் கைது செய்யவில்லை. வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை.

கைது செய்ய வேண்டியது அவசியமா? என்பதை விசாரணை நடத்தும் போலீசார் முடிவு செய்வார்கள். நேர்மையான முறையில் போலீசார் விசாரணை நடத்த காங்கிரசார் அனுமதிக்க வேண்டும். இறந்த சந்தோஷ் பட்டீல் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. குற்றச்சாட்டுகளில் இருந்து வெளியே வருவேன் என்று ஈசுவரப்பா கூறியுள்ளார். விசாரணைக்கு பிறகு யாருக்கு பின்னடைவு-யாருக்கு முன்னிலை என்பது தெரியவரும். அரசை பொறுத்த வரையில் பின்னடைவோ அல்லது முன்னிலையோ கிடையாது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Tags:    

Similar News