இந்தியா
மந்திரி சுபாஷ் சர்க்கார், மக்களவை

வரும் கல்வி ஆண்டு முதல் இளநிலை பட்டப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு- மத்திய அரசு முடிவு

Update: 2022-04-04 19:17 GMT
பல்வேறு தேர்வு வாரியங்களில் பயின்ற மாணவர்கள் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கல்வித்துறை இணை மந்திரி டாக்டர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளதாவது:

தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி, மாணவர்கள்,  பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒட்டுமொத்த கல்வி மீதான சுமையைக் குறைக்கும் விதமாக 2022-23 கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக பொது நுழைவுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சம அளவிலான பல்வேறு தேர்வு வாரியங்களில் பயின்ற மாணவர்களின் திறனை மதிப்பிடுவதற்காக, இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு  நடத்தப்படும்.  

அதே வேளையில், அவர்களுக்கு சம வாய்ப்பும் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒரே விண்ணப்பம் மூலம் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு  வழங்கப்படுவது அவர்களது கட்டணச் சுமையைக் குறைக்கும்.

மேலும், மாணவர்கள் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 13 மொழிகளில் தேர்வு எழுதவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. 12ம் வகுப்பு பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே இளநிலைப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News